Friday, 12 October 2012

கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா?



onlinepj.com
கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும். 
அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (19021)
கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை. 
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7288)
வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். 
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். 
(
அல்குர்ஆன் 2 : 286)
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது. 
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3498)

No comments:

Post a Comment