Monday, 18 June 2012

The God that never was? - "ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை''

The God that never was?
"ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை''
The God that never was?                                                                   ஏகத்துவம்-ஆகஸ்ட்-2011
மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் வழங்கிய புனிதக் குர்ஆன் இறங்கிய மாதம் தான் ரமளான். அல்குர்ஆன் மட்டும் தான் மனிதக் கை படாத, மனிதனின் கலப்படம் கலவாத ஓர் உன்னத வேதம், உயர்ந்த வேதம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது தான் அது கூறுகின்ற கடவுள் கொள்கை! படைத்த ஓர் இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. கடவுளுக்கு வேறு எதுவும், யாரும் இணையாக இல்லை என்று சொல்கின்ற ஏகத்துவக் கொள்கையாகும். யாராலும், எவராலும் உடைக்க முடியாத ஓர் உச்சக்கட்ட உன்னதக் கொள்கை! பகுத்தறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத தெளிவான கொள்கை!
இந்தக் கொள்கையுடன் பைபிள் கூறும் கடவுள் கொள்கையை உரசிப் பார்க்கின்ற, ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஆய்வுப் பார்வைக்காக அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள், The God that never was? "ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை'' என்ற தலைப்பில் எழுதிய நூலின் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதனால் அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்க பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.
கிறித்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்திற்கு அஹ்மத் தீதாத் அவர்கள் தனது பிரச்சாரத்தின் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் விவாதக் களங்களிலும் தக்க பதிலடி கொடுத்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் பித்அத்துக்களை அவர் கண்டிக்கவில்லை என்பதுடன் சில இடங்களில் ஆதரித்தும் பேசியுள்ளார்.
எனவே அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை இங்கு நாம் வெளியிடுகிறோம் என்றால் இதைப் படிப்பவர்கள்,கிறித்தவர்களை எதிர்கொள்ள தயக்கமோ கலக்கமோ அடையாமல் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு இந்தக் கருத்துக்கள் பயனுள்ளவையாக இருக்கும் என்ற அடிப்படையில் தான். இங்கு ஒரு மொழிபெயர்ப்பை நாம் தந்துள்ளோம். இந்த ஒரு கோணத்தில் மட்டும் அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க், பித்அத்தை ஆதரித்து யார் கருத்துக் கூறினாலும் அவற்றை எதிர்ப்பதற்கு நாம் எந்தத் தயக்கமும் காட்ட மாட்டோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இயேசு - ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை
ஒரே ஒரு தூய கடவுள் தான் இருக்கின்றான் என்று சாதிக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். தூய கடவுள் என்பதன் பொருள், கடவுள் என்ற தன் இயற் தன்மையில், இறைத் தன்மையில், அவனது பண்புகளில் அவன் தன்னை யாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. யாருக்கும் பங்கு வைத்துக் கொடுக்கவில்லை. இதோ அல்குர்ஆன் முழங்குகின்றது:
"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்ஆன் 112வது அத்தியாயம்
தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில், முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதற்காகவே கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தூதர் என்று கூறிக் கொண்டு ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். இயேசுவைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். இயேசு கடவுள் என்ற இந்த வாதம் முஸ்லிம்களுக்குக் கோபத்தையும் குமட்டலையும் தருகின்ற வாதமாகும். காரணம், அது தூய கடவுள் தன்மைக்கு எதிரானது. எனவே இதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஜீரணிக்க மாட்டார்கள். இருந்தும் அவர் உண்மையின் போக்கைத் திசை மாற்றவும், தலைகீழாகப் புரட்டிப் போடவும் வெறியாக இருக்கின்றார்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 17:81
இயேசு கடவுள் என்பதற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறுகிறார்.
1. இயேசு கடவுள் என்று சொல்லும் போது அவரை நாம் தந்தையாக ஆக்கி விட மாட்டோம். அவர் தந்தையுடன் உள்ள ஒருவர். அதனால் அவர் அவருடைய தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றார்.
2. அவர் எல்லா வழிகளிலும், வகையிலும் தந்தையைப் போன்றவர். ஆனால் தந்தை இல்லை.
சுருக்கமாக, இவரது கருத்துப்படி இயேசு ஒரு கடவுள் என்பதற்குக் காரணம் அவர் கடவுள் தன்மையைப் பகிர்ந்து கொள்கிறார்; மேலும் அவர் எல்லா வழிகளிலும் கடவுளைப் போன்று இருக்கிறார்.
இயேசு கடவுளைப் போன்றவர் கிடையாது என்பதற்கும் கடவுள் தன்மையைப் பகிரவில்லை என்பதற்கும் பைபிளிலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இங்கு காட்டப்படுகின்றன.
இங்கு இயேசுவைக் குறிப்பிடும் இடங்களில் கேள்விக்குறியிட்டு "கடவுள்' என்றே குறிப்பிட்டுள்ளோம். இதற்குக் காரணம், இந்தத் தன்மைகள் கொண்ட ஒருவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பதைப் புரிய வைப்பதற்காக இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம்.
இயேசுவைக் கடவுள் என்று சொல்வது கடவுள் தன்மையைக் கேலி செய்வதாகும். மிக அற்பத்தனமான பழியும் அபாண்டமும் ஆகும். மனிதனின் புத்திக் கூர்மைக்கு ஓர் அவமானமாகும்.
கடவுளின் பிறப்பு?
இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்;
ரோமையர் 1:3
தாவூதின் வழித்தோன்றலான கடவுள்?
அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.
திருத்தூதர் பணிகள் 2:30
கடவுளின் மூதாதையர்கள்?
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.
மத்தேயு 1:1
கடவுளுக்குப் பெயர் சூட்டுதல்?
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
லூக்கா 2:21
மேரி கருவுற்றுப் பிரசவித்த கடவுள்?
அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
லூக்கா 2:6
அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
திருவெளிப்பாடு 12:2
இதன் பொருள் என்ன? ஒரு கர்ப்பிணிப் பெண் அடைகின்ற அத்தனை இயற்கையான கட்டங்களையும் மேரி அடைந்தார். அல்லது அவரது பிரசவம் மற்ற கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தைப் போன்று தான் இருந்தது. வித்தியாசமாக ஒன்றுமில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகின்றது.
பால் குடித்த கடவுள்?
அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார்.
லூக்கா 11:27
கடவுள் பிறந்த ஊர், நாடு?
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
மத்தேயு 2:1

கடவுளின் தொழில்?
"இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மாற்கு 6:3
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன்,யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
மத்தேயு 13:55
கழுதையில் வரும் கடவுள்?
"கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்'' என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.
மத்தேயு 21:5
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.
யோவான் நற்செய்தி 12:14
குடிகாரக் கடவுள்?
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்'' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.
மத்தேயு 11:19
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்'' என்கிறீர்கள்.
லூக்கா 7:34


கடவுளின் வறுமை?
இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார்.
மத்தேயு 8:20
கடவுளின் அற்ப உடைமைகள்?
யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்;ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.
லூக்கா 3:16
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
யோவான் நற்செய்தி 19:23
கடவுள் பக்தி மிக்க ஒரு யூதர்?
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
மாற்கு 1:35
கடவுள் விசுவாசமிக்க குடிமகன்?
அவர்கள், "சீசருடையவை'' என்றார்கள். அதற்கு அவர், "ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 22:21
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.
மத்தேயு 17:24
அதாவது கடவுள் தவறாமல் வரி செலுத்தியுள்ளார்.
கடவுளின் குடும்பம்?
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, "இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்'' என்றார்.
யோவான் நற்செய்தி 1:45
கடவுளின் சகோதரர்கள், மைத்துனர்கள்?
தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள்.
மத்தேயு 13:54-56
கடவுளின் பரிணாம வளர்ச்சி?
குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
லூக்கா 2:40
கடவுளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி?
இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
லூக்கா 2:52
பன்னிரண்டு வயதுக் கடவுள்?
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
லூக்கா 2:41, 42
அதிகாரமில்லாத கடவுள்?
நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
யோவான் நற்செய்தி 5:30
கால, நேரம் அறியாத கடவுள்?
"ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது;விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது''
மாற்கு 13:32
பருவ காலம் தெரியாத கடவுள்?
மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல.
மாற்கு 11:12, 13
எழுத்தறிவில்லாத கடவுள்?
பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.
"படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?'' என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
யோவான் நற்செய்தி 7:14, 15
அனுபவத்தின் மூலம் பயின்ற கடவுள்?
அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்.
எபிரேயா 5:8
சாத்தான் வயமான கடவுள்?
உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
மாற்கு 1:12, 13
சாத்தானின் தொடர்பில் கடவுள்?
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
லூக்கா 4:13
பாவிகள் போன்று சாத்தானுக்குப் பலியாகும் கடவுள்?
அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
லூக்கா 4:15
உண்மையான கடவுள் தீமைக்குள்ளாவதில்லை
சோதனை வரும்போது, "இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது'' என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.
யாக்கோப் 1:13
கடவுள் அல்லாதோர் தான் தீமையில் கவரப்படுவர்
ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.
யாக்கோப் 1:14
கடவுளின் வாக்குமூலமும் பாவ மன்னிப்பு தேடுதலும்?
அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
மத்தேயு 3:13
அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
மத்தேயு 3:6
நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
மத்தேயு 3:11
பாவிகளைக் காக்க முன்வராத கடவுள்?
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு,உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது;புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.
எனவே அவர்கள் "ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்'' என்று கூறினார்.
மாற்கு 4:10-12
இனவாதம் பேசும் கடவுள்?
அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்'' என்று கூறினார்.
திருவெளிப்பாடு 5:5
யூதருக்கு மட்டும் வந்த கடவுள்?
அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'' என்றார்.
மத்தேயு 15:24
இனப் பாகுபாடு காட்டும் கடவுள்?
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது; "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்''
மத்தேயு 10:5, 6
யூதரல்லாதவர்களை நாய் எனக் கூறும் கடவுள்?
அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார்.
மத்தேயு 15:26
கடவுளின் ராஜ்யம்?
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது''என்றார்.
லூக்கா 1:33
கடவுளின் தகுதியைக் குறிக்கும் பட்டம்?
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
மத்தேயு 2:2
நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார்.
யோவான் நற்செய்தி 1:49
பசி தாங்காத கடவுள்?
அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
மத்தேயு 4:2
காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.
மத்தேயு 21:18
மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
மாற்கு 11:12
கடவுளின் தாகம்?
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது'' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
யோவான் நற்செய்தி 19:28
தூங்கும் கடவுள்?
திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
மத்தேயு 8:24
படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.
லூக்கா 8:23
அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே,சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
மாற்கு 4:38
களைத்துப் போகும் கடவுள்?
அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
யோவான் நற்செய்தி 4:6
கலங்கும் கடவுள்?
மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்று கேட்டார்.
யோவான் நற்செய்தி 11:33
குமுறுகின்ற கடவுள்?
இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
யோவான் நற்செய்தி 11:38
அழுகின்ற கடவுள்?
அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
யோவான் நற்செய்தி 11:35
துக்கம் மிகுந்த கடவுள்?
பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 26:37, 38
உடல், உள ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் கடவுள்?
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
மாற்கு 14:33
பலவீனமான கடவுள்?
(அப்போது விண்ணகத்திலிருந்து) ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.
லூக்கா 22:43
கடவுளின் வலிமை மிகு வீர சாகசம்?
இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.
லூக்கா 19:45
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;
கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
யோவான் நற்செய்தி 2:13-15
போர்க் கடவுள்?
"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
மத்தேயு 10:34
பொங்கி எழும் கடவுள்?
அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.
லூக்கா 22:36
ஓட்டமெடுக்கும் கடவுள்?
இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யோவான் நற்செய்தி 7:1
யூதர்களுக்குப் பயந்து ஒளியும் கடவுள்?
ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
யோவான் நற்செய்தி 11:53, 54
கல்தா கொடுத்த கடவுள்?
இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
யோவான் நற்செய்தி 10:39
மாறு வேடம் பூண்ட கடவுள்?
இதைக் கேட்ட அவர்கள் அவர் மேல் எறிய கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.
யோவான் நற்செய்தி 8:59
காட்டிக் கொடுக்கப்பட்ட கடவுள்?
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.
படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
யோவான் நற்செய்தி 18:2, 3
கைது செய்யப்பட்ட கடவுள்?
படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் நற்செய்தி 18:12, 13
அவமானப்படுத்தப்ட்ட கடவுள்?
இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.
அவரது முகத்தை மூடி, "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்'' என்று கேட்டார்கள்.
லூக்கா 22:63, 64
பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்'' என்று கேட்டனர்.
மத்தேயு 26:67, 68
தற்காப்பில்லாத கடவுள்?
அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?'' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.
யோவான் நற்செய்தி 18:22, 23
கடவுளுக்கு மரண தண்டனை?
இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?'' என்று கேட்க, அவர்கள் அனைவரும், "இவன் சாக வேண்டியவன்'' என்று தீர்மானித்தார்கள்.
மாற்கு 14:64
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்'' எனப் பதிலளித்தார்கள்.
மத்தேயு 26:66
ஊமையாய் அடங்கிப் போன கடவுள்?
அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு; "அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்''
திருத்தூதர் பணிகள் 8:32
சாகும் கடவுள்?
இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
மாற்கு 15:37
செத்து விட்டாரென கருதப்படும் கடவுள்?
நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
ரோமையர் 5:6
பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
யோவான் நற்செய்தி 19:53
கடவுளின் பிரேதம்?
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.
மத்தேயு 27:58
கடவுளின் சவத் துணி?
யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.
மத்தேயு 27:59, 60
கடவுளின் மரண அறிவிப்பு?
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
லூக்கா 23:46, 47
முடிவுரை
கிறிஸ்துவின் தூதர் என்று தன்னைத் தானே கூறிக் கொண்ட அந்த தென்னாப்பிரிக்க வழக்கறிஞரின் கருத்துப்படி இயேசு கிறிஸ்து கடவுள் தன்மையில் பகிர்ந்து கொண்டார், அவர் கடவுளைப் போன்றவர் என்பதாகும்.
ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டியிருக்கும் பைபிள் மேற்கோள்களின் படி இயேசு கடவுள் தன்மையில் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் அவர் எந்த வகையிலும் கடவுளைப் போன்றவர் இல்லை என்பதும் தெளிவாக விளங்க முடிகின்றது.
எனவே இயேசு உறுதியாகக் கடவுள் இல்லை. அவர் கடவுள் தான் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த வழக்கறிஞருக்கு மட்டுமல்ல. இயேசுவைக் கடவுளாக நம்பும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இருக்கின்றது. அல்லது இவர்கள் பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.



No comments:

Post a Comment