Tuesday 29 May 2012

உவமைகள் பல உரைத்த நபிகளார்



بسم الله الر حمن الر حيم
உவமைகள் பல உரைத்த நபிகளார்
யாசர் அரபாத் ,மங்கலம்-திருப்பூர்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நல்ல செயல்களை ஊக்கப்படத்தவும், தீமைகளை தடுக்கவும் பிற மனிதர்களுக்கு விளங்கும் வண்ணம் பல உவமைகளை கூறி வருகிறோம். அந்த உவமைகள் உயிரினமாக அல்லது உயிரற்ற பொருளாக இருக்கும்.
உதாரணமாக ஒரு கடையில் வேலை செய்யும் நபர் சோம்பேறியாக இருந்தால் அவனை ஊக்கப்படுத்த எறும்பை உதாரணம் காட்டி அது எப்படி சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்பதை எடுத்துச்சொல்லி புரியவைப்போம். அதேபோல் ஒருவன் நயவஞ்சக குணம் கொண்டவனாக இருந்தால் பச்சோந்தியின் நிற மாற்றத்தை உதாரணம் கூறி பச்சோந்தி எப்படி செல்லும் இடத்திற்கு தகுந்தார் போல் நிறத்தை மாற்றுகிறதோ அதே போல் நீயும் உன் குணத்தை மாற்றாதே என்று அவர் செய்யும் தவறை புரிய வைப்போம். இப்படி நம் வாழ்கையில் பல உவமைகளை பயன்படுத்தி வருகிறோம்.
தமிழின் பழமொழிகளிலும் இது போன்ற பல உவமைகள் பயன்படுத்தப்படுவதை காண்கிறோம்.
கடன்பட்டார் நெஞ்சம் போல
குரங்கின் கை பூமாலை போல
எலியும் பூனையும் போல
புற்றீசல் போல
வேலியே பயிரை மேய்ந்தது போல
பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல
என்றெல்லாம் பல உவமைகள் பயன்படுத்தப்படுகிறது.
இது போன்று நபி(ஸல்) அவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் நன்மை,தீமைகளை தெளிவுபடுத்த பல்வேறு விதமான அழகிய உதாரணங்களை மக்களுக்கு கூறியிருக்கிறார்கள். அதில் சில உதாரணங்களை காண்போம்.
      முஃமின் மற்றொரு முஃமினுக்கு
உடல்
"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல்முழுவதும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011

கட்டிடம்
"ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : புகாரி 481
மேற்கண்ட இரண்டு உதாரணங்கள் மூலம் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு உடலைப் போன்றும், கட்டிடத்தைப் போன்றோம் துன்பத்தில் உதவுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அழகிய உதாரணத்தை கூறுகிறார்கள்.
இறந்த வீடு
இறை நினைவில்லாத வீடு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429
இன்றைய கலாச்சார சீர்கேட்டின் காரணமாக முஸ்லிம்களுடைய ஒவ்வொரு வீடும் மார்க்கத்திற்கு முரணான அனைத்து காரியங்களும் நடக்கக்கூடிய வீடாக மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பும் கூட வீடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இஸ்லாமிய பெண்கள் திருக்குர்ஆனை ஓதி இறை நினைவுள்ள வீடாக வைத்திருந்தார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் எந்நேரமும் தொலைகாட்சி நினைவுள்ள வீடாக மாற்றியுள்ளனர். இப்படிப்பட்ட இறை நினைவில்லாத வீட்டை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறந்த மனிதனை ஒப்பிட்டு இறந்த வீடாக கூறியுள்ளார்கள்.
click read more........


இறுதி நபியின் உதாரணம்
கட்டிடத்தின் இறுதி செங்கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535
இறுதி நபியான முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வரமாட்டார் என்பதை குழந்தைக்கும் புரியும் வண்ணமாக கட்டிடத்தில் வைக்கப்படும் இறுதி செங்கலைப் போன்று நான் தான் நபிமார்களில் இறுதி நபி என்று ஒப்பிட்டுள்ளார்கள். ஆனாலும் இதைப் புரியாத சிலர் வழிகேடர்களை முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின் நபியாக எடுத்துள்ளார்கள். மிர்ஸா குலாம், ரஷாதி கலீபா போன்ற வழிகேடர்கள் நபி இல்லை என்பதற்கு இந்த ஒரு ஹதீஸ் போதுமானதாகும்.
கஞ்சனும்,வள்ளலும்
"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1443, 1444, 5797 
அல்லாஹ் கொடுத்துள்ள செல்வதை நல்வழியில் செலவிடும் வள்ளலுக்கும், செலவிடாமல் இருக்கும் கஞ்சனுக்கும் நபி(ஸல்) அவர்கள் இரும்பாலன அங்கியை உதாரணம் கூறுகிறார்கள். வள்ளலான மனிதர் செலவு செய்யும் போதெல்லாம் இரும்பாலான உடை கால்களை மூடும் அளவிற்கு விரிவடைந்து பாதுகாப்பளிக்கும். அதேபோல் கஞ்சத்தனம் செய்பவன் எப்போதெல்லாம் அவன் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் கஞ்சத்தனம் செய்ய எண்ணுகிறானோ அப்போது அவனுடைய உடலை அந்த இரும்பு உடை விடுபடமுடியாத அளவிற்கு கடுமையாக நெருக்கும் என்று கஞ்சனுக்கும்,வள்ளலுக்கும் அழகிய உதாரணத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
ஐவேளைத் தொழுகையின் உதாரணம் 
அழுக்கில்லாத குளியல்
'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறதுஅதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமாஎனக் கூறுங்கள்என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராதுஎன நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071  

நாம் செய்யக்கூடிய சிறு பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதற்கு முக்கியாமான காரணமாக ஐவேளை தொழுகை இருக்கிறது என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் நபி(ஸல்) அவர்கள் ஒருமனிதரை ஒப்பிட்டு அவர் வீட்டுக்கு அருகில் ஓடும் ஆற்றில் ஐந்து வேளை குளித்தால் எப்படி அவரது உடலில் அழுக்கு எதுவும் இருக்காதோ அதே போல் அவருடைய பாவங்கள் அவருடய உடலில் இருக்காது என்று ஒரு அற்புதாமன உதாரணத்தை கூறுகிறார்கள்.இதை புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஐவேளை தொழுகைகளை சரியாக நிறைவேற்றினால் அல்லாஹ் நம் அனைவரின் பாவத்தையும் மன்னிப்பான்.

அன்பளிப்பை திரும்பப் கேட்பவன்
தன் வாந்தியை தின்னும் நாய் போன்றவன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல் : புகாரி (2589)  

மனிதர்களுக்கு மத்தியில் அன்பை வளர்க்கக்கூடிய அன்பளிப்பு வழங்குவதை நம் மார்க்கம் ஆர்வப்படுத்துகிறது என்பதை அறிவோம்.
அதே சமயம் மனக்கசப்பின் காரணமாக கொடுத்த அன்பளிப்பை திருப்பிக் கேட்கும் இழிவான செயலை இஸ்லாம் கண்டிக்கிறது. இந்த இழிவான செயலை மக்களுக்கு விளக்குவதற்காக நாய் எப்படி தான் வாந்தி எடுத்ததை திரும்பத் திண்ணுமோ அது போன்ற கேவலாமான செயல்தான் அன்பளிப்பை திரும்பக் கேட்கும் செயல் என்று கடுமையான ஒரு உதாரணத்தை நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட கேவலாமான செயலை நம் இஸ்லாமிய மக்கள் மொய் எழுதுதல் என்கிற பேரில் திருமண நிகழ்ச்சியில் செய்கிறார்கள். யார் யாரெல்லாம் அன்பளிப்பு கொடுக்கிறார்களோ அவர்களுடைய பெயரை எழுதி வைத்து அவரது வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களின் போது அப்படியே திருப்பிக் கொடுக்கும் பழக்கம் நம் மக்களிடம் இருக்கிறது.
அன்பளிப்பை கொடுக்ககூடியவர் கொடுக்கும்போதே நாம் இவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தால் நமக்கு மீண்டும் அந்த அன்பளிப்பை  கொடுத்துவிடுவார்கள் என்ற கேவலான எண்ணத்தில் மொய் வைத்தல் என்ற காரியத்தை செய்து வருபவர்கள் நபிகளாரின் இந்த கடுமையான எச்சரிக்கையை பயந்து இதோ போன்ற இழி செயலை செய்பவர் திருந்திக்கொள்ள வேண்டும்.
வளைந்த எலும்பை மேலும் வளைக்காதே!

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186

குடும்ப வாழ்கை சிறப்பாக அமைய இஸ்லாம் பல அறிவுரைகளை சொல்கிறது. அதிலும் குறிப்பாக கணவன்,மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் வராமல் இருக்க நபி(ஸல்) பல அறிவுரைகளை கூறியுள்ளார்கள். அந்த அறிவுரைகளில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ள பெண்ணைப் பற்றி நபிகளார் கூறிய உவமை பற்றிய செய்தி. ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கும் அந்த குறைபாடுகளை சகித்து வாழ்ந்தால் குடும்பம் சிறப்பாக அமையும் அதை புரிய வைப்பதற்காக நபியவர்கள் பெண்ணை ஒரு வளைந்த விலா எலும்பிற்கு ஒப்பிட்டு, வளைந்த எலும்பை சரிசெய்கிறான் என்று சொல்லி மேலும் வளைத்தால் எப்படி உடைந்து விடுமோ அதே போல் பெண்ணுடைய குறையை போக்குகிறேன் என்று சொல்லி மேலும் வலைக்காதீர்கள். அப்படியா விட்டுவிடுங்கள் என்று நபியவர்கள் உதாரணம் கூறுகிறார்கள்.

முஃமினே ஏமாறாதே!

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6133

ஒரு முஃமின் இரண்டு முறை ஏமாறக்கூடாது. ஒருமுறை ஒரு காரியத்தில் ஏமாந்து விட்டால் அடுத்த முறை சுதாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நபியவர்கள் விஷஜந்துக்களுடைய புற்றை குறிப்பிட்டு ஒரு முறை கொட்டப்பட்டு மறுமுறையும் அதிலே கைவிட்டு ஏமாறக்கூடாது என்று உவமை கூறுகிறார்கள்.

குர்ஆன் ஒதுபவரின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020

குர்ஆன் ஓதுவதின் சிறப்பை உணர்த்த நபியவர்கள் அழகிய உதாரணம் கூறுகிறார்கள். யார் குர்ஆன் ஓதி, நல் அமல் செய்கிறாரோ, அவர் எலுமிச்சை பழத்தை போல் சுவை,மனம் என்ற இரு நற்குணங்களையும் பெற்றிருக்கிறார் என்று உதாரணம் கூறியுள்ளார்கள்.

ஸஜ்தாவில் நாயைப் போல் விரிக்காதே!

'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850 

தொழுகை என்ற வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்ற நபியவர்கள் உதாரணங்கள் பல கூறி விளக்கியிருக்கிறார்கள்.அதில் ஒன்று தான் ஸஜ்தாவின் போது நாய் எப்படி தன்னுடைய முன்கால்களை தரையில் பரப்பி வைக்கிறதோ அதை போல் வைக்காதே என்று நபியவர்கள் உதாரணம் கூறுகிறார்கள்.

நல்ல நண்பன், கெட்ட நண்பன்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)
நூல் : புகாரி (2101)
ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதற்கும், கெட்டவனாக வாழ்வதற்கும் நட்பு முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் சமுதாயத்தினர் நட்பு விஷயத்தில் மிக,மிக விழிப்புடன் இருக்க வேண்டும். இதை நபியவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். நல்ல நண்பனின் நட்பு என்பது கஸ்தூரி வைத்திருப்பவனுடன் நட்பு கொள்வது போன்றது. அவனிடன் அதை விலைக்கு வாங்கலாம் அல்லது அவனிடம் சென்றால் கஸ்தூரியின் மனமாவது கிடைக்கும். ஆனால் கெட்டவனிடம் நட்பு வைத்தால் கொல்லனின் உலை போன்று அவனிடம் நன்மை பெற முடியாது. அந்த உலை வீட்டையோ,ஆடையோ எரிக்கும் அல்லது அவனிடம் கெட்ட வாடையை தான் பெறுவாய் என்று நபியவர்கள் கெட்டவனிடம் நட்பு கொள்வதால் ஏற்படும் விளைவை விளக்குகிறார்கள்.
இந்த உதாரணம் அப்படியே பொருந்திப் போகும் வகையில் நல்லவனாக இருந்தவன் கூட தீய நட்பின் காரணமாக குடிகாரனாகவும்,திருடனாகவும் பல தீமைகள் செய்பவனாகவும் மாறுவதை காண்கிறோம். பெற்றோர்கள் கூட தன் பிள்ளையை பற்றி கூறும்போது தன் பிள்ளையின் நண்பனை குறிப்பிட்டு இவனிடம் சேர்ந்து தான் என் மகன் வீணாகிவிட்டான் என்று தாய்,தந்தையர் புலம்புவதை காண்கிறோம். எனவே நல்லவரோடு நட்பு கொண்டு பயன் பெறவோம்.

மெளனம் சம்மதமே!

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் பல உரிமைகளில் முக்கியமான ஒன்று கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை. கன்னிப்பெண்ணாக இருந்தாலும்,விதவையாக இருந்தாலும் திருமணத்திற்கு சம்மதம் பெறுவது கட்டாயமானதாகும். இதை நபிகளார் விளக்கும்போது கன்னிப்பெண் வெட்கப்பட்டால் அவளின் மெளனம் சம்மதத்தை குறிக்கும் என்று மெளனத்தை சம்மதத்திற்கு உவமையாக கூறியுள்ளார்கள்.

நயவஞ்சகனின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
முஸ்லிம் (5369)
மனிதனுடைய குணங்களில் மிக மோசமானது நயவஞ்சககுணம். நயவஞ்சகன் அவன் செல்லும் இடத்திற்கு தகுந்தார்போல் குணத்தை மாற்றிக்கொண்டு அவன் யாரிடமெல்லாம் செல்கிறானோ அவர்களுக்கு துரோகம் செய்வதை காண்கிறோம்.இதை நபிகளார் விளக்க இரண்டு கிடாக்களுக்கிடையே சுற்றுவரும் பெட்டை ஆட்டைப் போன்ற நிலைதான் நயவஞ்சகனின் கேவலமான குணம் என்று உதாரணம் கூறி விளக்குகிறார்கள்.

தொழுகையில் ஒட்டகத்தைப் போல் அமராதே!
'உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079

ஸஜ்தா செய்யும் போது அதிகமான நபர்கள் முதலில் தங்களுடைய கைகளை தரையில் வைக்காமல் கால் மூட்டுகளை தரையில் வேகமாக இடிப்பதைப் பார்க்கிறோம். இந்த முறை தவறு என்பதை விளக்க நபியவர்கள் ஒட்டகத்தை உதாரணம் கூறி ஒட்டகம் அமர்வதைப் போல் அமராதீர்கள் என்று உதாரணம் கூறியுள்ளார்கள். ஒட்டகம் தனது முன்னங்கால்களை முதலில் மடக்கும் பிறகுதான் பின்னங்கால்களை மடக்கும். மிருகங்களில் பின்னங்கால்கள் என்பதுதான் கைகளாக பயன்படுத்தப்படும்.எனவே ஒட்டகம் முதலில் கால்களை வைக்கும் நாம் முதலில் கைகளை வைத்துதான் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள இவ்வாறு ஒட்டகத்தை உவமை கூறுகிறார்கள்.
முஃமினுக்கு உலகம் சிறைச்சாலை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663 

மறுமையில் வெற்றி பெற இவ்வுலகத்தில் முஃமினுக்கு இறைவன் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். இதை நபிகளார் உதாரணமாக கூறுகையில் முஃமினுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை போன்றது என்று கூறியுள்ளார்கள். சிறைச்சாலையில் எப்படி கட்டுபாடுகள் இருக்குமோ அதே போல்தான் முஃமின் என்பவன் இவ்வுலகில் இறைவனுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவனாக இருக்கவேண்டும் என்றும், காபிருக்கு இவ்வுலகம் சொர்க்கத்தைப் போன்று எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்றும் நபிகளார் உவமை கூறியிருக்கிறார்கள். 
அல்லாஹ்வை எப்படி பார்ப்போம்
"அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?'' என்று நாங்கள்கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும்சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள்.நாங்கள், "இல்லை'' என்று பதிலளித்தோம். "இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப்போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்'' ……………………………………..
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7439
சொர்கவாசிகளுக்கு கிடைக்கும் இன்பங்களில் மிக முக்கியமானது இறைவனை காணும் பாக்கியமாகும். இறைவனை காணும் பாக்கியத்தை நபிகளார் விளக்கும்போது மேகமில்லாத சூரியனையும் சந்திரனையும் எப்படி நாம் முன்டியடித்துக்கொள்ளாமல் சுலபாக,தெளிவாக காண்போமோ அதே போல் மறுமையில இறைவனை காண்போம் என நபிகளார் உவமை கூறியுள்ளார்கள்.

சொர்கத்திற்கான அழைப்பை ஏற்றவரின் உதாரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர்இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். அதற்கு மற்றொருவர் கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறதுஎன்று கூறினார். பின்னர் அவர்கள் உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்றார். மற்றொருவர் கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது என்றார். பின்னர் அவர்கள் இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை என்று கூறினர்.
பின்னர் அவர்கள் இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும் என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்று சொல்ல மற்றொருவர் கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறதுஎன்றார். அதைத் தொடர்ந்து அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள் என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7281
நபி(ஸல்) அவர்களைப் பற்றி மலக்குமார்கள் உரையாடிய சம்பவத்தை நபிகளார் கூறும்போது பின்வரும் உதாரணத்தை கூறியுள்ளார்கள்.ஒரு மனிதன் வீட்டை கட்டி விருந்திற்கு அழைக்கிறான்,அதை ஏற்றுக்கொண்டு சிலர் விருந்துண்டனர், சிலர் விருந்தழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவம் நபிகளார் செய்த அழைப்புப்பணிக்கு உதாரணமாகும்.சிலர் நபிகளார் அழைத்த ஓரிறை கொள்கையின் பக்கம் வந்தனர். சிலர் அழைப்பை ஏற்கவில்லை என்று உவமை கூறியுள்ளார்கள்.மேலும் இந்த ஹதீஸ் ஒருவர் வீடுகட்டி பித்அத் ஏதும் செய்யாமல் விருந்து வைத்தால் அது கூடும் என்பதற்கு ஆதாரமாகும்.

பாவமன்னிப்பு கேட்கும்போது இறைவனின் மகிழ்ச்சிக்கான உதாரணம்
ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான்'' என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4932
இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் போது இறைவன் எவ்வாறு  மகிழ்ச்சி அடைகிறான் என்பதை நபிகாளார் கூறும்போது ஒருவன் ஒட்டகத்தில் பயணம் செய்கிறான் யாருமில்லாத வெட்ட வெளியில் அந்த ஒட்டகம் ஓடிவிடுகிறது. அவனுடைய உணவு ஓட்டக்தில் இருக்கும் நிலையில் அவன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணி மரத்தடியில் நிற்கதியாக படுத்துவிடுகிறான்.திடீரென்று அவனுடைய ஒட்டகம் திரும்பி ஒரும்போது அவன் எப்படி அளவற்ற மகிழ்ச்சியடைவானோ அதைவிட இறைவன் தன் அடியான்  பாவமன்னிப்பு கேட்கும்போது மகிழ்ச்சியடைவதாக நபிகளார் உவமை கூறுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் உதாரணம்

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்க ளுக்குப் பயன்படச் செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்ற வனுக்கும் உதாரணமாகும்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி  4587
நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதன் உவமை பெருமழை போன்றதாகும்.அந்த பெருமழை பயனுள்ள இடத்தில் விழுந்து புற்பூண்டுகளை ,முளைக்கைச் செய்தது. மனிதர்களுக்கும்,கால்நடைகளுக்கும் பயன்பட்டது.இது நபிகளாரின் உபதேசத்தை ஏற்று பயன்பெற்றவர்களுக்கு உதாரணமாகும். அந்த பெருமழை பயனில்லாத கட்டாந்தரைகளிலும் விழுந்தது. இது நபிகளாரின் உபதேசத்தை ஏற்காதவற்கான உதாரணமாக நபிகளார் கூறியிருக்கிறார்கள்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் உதாரணம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
 நூல்: புகாரி 1358, 1359, 1385,
ஒரு குழந்தை அல்லாஹ்வை வணங்கக்கூடிய குழந்தையாக அல்லது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குழந்தையாக மாற பெற்றோர் முக்கிய காரணமாக உள்ளனர். இதை விளக்க நபிகளார் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் எந்த குறைகளும் இல்லாமல் பிறக்கும் விலங்கை போன்றதுதான் அனைத்து குழந்தையும் பாவமற்ற குழந்தையாக பிறக்கிறது. அவர்களுடைய பெற்றோர் தான் இணைவைக்கும் குழந்தையாக மாற்றுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் உவமை கூறுகிறார்கள்.
முதல் வரிசை மலக்குமார்களின் வரிசை
(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமானதொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில்தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறதுமலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர்போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிகபரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப்பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் மிகவிருப்பத்திற்குரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்
: உபை பின் கஅப் (ரலி), 

நூல்
: அபூதாவூத் 467 
முதல் வரிசையில் நின்று தொழும் சிறப்பை விளக்க நபி(ஸல்) அவர்கள் முதல் வரிசை என்பது மலக்குமார்கள் இறைவனிடம் எப்படி நெருக்கமான அந்தஸ்து பெற்றிருகிறார்களோ அதைப்போன்று இறைவனிடம் நெருக்கம் ஏற்படுத்தும் வரிசை என்று உவமை கூறியுள்ளார்கள்.
ஆகவே நபிகளார் கூறிய அழகிய உதாரணங்களை புரிந்து,நம் வாழ்க்கையில நடைமுறை படுத்தக்கூடிய மக்களாக நாம் ஆகவேண்டும்.

5 comments:

  1. மலேசிய தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு என் வாழ்த்துக்கள். மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. ”தக்வாவில் மக்களை வார்தெடுப்போம்”, ஜமாஅத் மென்மேலும் வேகத்துடன் செயல்பட வள்ள இறைவன் போதுமானவன்.
    -ரஃபி ஜித்தா.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ், ஜஷாகல்லாஹ்.

    ReplyDelete
  5. அருமை பாய்

    ReplyDelete