Wednesday 20 June 2012

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்


நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்                 
ஆர். அப்துல் கரீம்எம்.ஐ.எஸ்.சி. 
அபூஹனிஃபாவின்  ஃபத்வா
மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம் 3, பக்கம் 116
(ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.)
இந்த ஃபத்வாவின் விபரீதத்தைஅபத்தத்தைப் புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும் ஹராமே!
யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம் ஆக்கினான். ஆனால் அவர்கள் அதை உருக்கி,பிறருக்கு விற்ற காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள் என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ்  தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2224
இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை விற்பதும் ஹராமே என்பதையும்,அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  இந்த அடிப்படையிலே மதுபன்றிசிலைசெத்தவை ஆகியவை இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப் போன்று விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்கபருகக் கூடாது என்று ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது என்பதை இந்த அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாகதடை செய்யப்பட்ட பானங்களை விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு மட்டும் விலக்களித்திருக்கின்றார். இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல. மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவைஅசுத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பது அனுமதி என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.

இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது கூடும் என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?
பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய போதனை. இதை வலியுறுத்தி எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா கண்டு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் ஒன்றை ஹராம் என்பதும்ஹலால் என்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோஅவன் அனுமதித்த ஒன்றைத் தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும் அதிகாரம் இல்லை.

பணத்திற்காகத் தொழுகை
மத்ஹப் வழி
"நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன்'' என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற வேண்டும். தங்கக் காசுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது.

(துர்ருல் முக்தார்பாகம்: 1, பக்கம்: 473)
ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.
மாநபி வழி
வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்றதூய எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோவிளம்பர நோக்கமோ இருக்கும் எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

அல்குர்ஆன் 5:27
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும்உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலை நாட்டுமாறும்ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5
இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்காக தொழுவது நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின் குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும்மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 4:142
இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த ஒரு வணக்கத்திற்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.
"மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: முஸ்லிம்
நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டும்மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும் இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத் தொழுதால் அந்தத் தொழுகை செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம் எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும் எதிரானது;முரணானது.
மழைத் தொழுகை இல்லை (?)
மத்ஹபு வழி
இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை வேண்டுவதிலே ஜமாஅத்தாகத் தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள் தனித்தனியாகத் தொழுதால் கூடும். "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது துஆ செய்வதும் பாவமன்னிப்புத் தேடுவதும் தான்.  நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை. 
நூல்: ஹிதாயா

பாகம் 1, பக்கம் 87
மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),

நூல்: புகாரி 1012
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1024
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: திர்மிதீ 512
இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து. அபூஹனிபாவின் கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு விட்டார் என விமர்சிக்கின்றார். அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.
மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு ஆதாரங்களை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக் கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையாஎங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நாம் கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும் தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில் அவர் தப்பும் தவறுமாகத் தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.
தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு விலகிதவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தொழுகையின் துவக்கம் இனி "அர்ரஹ்மானு அக்பர்'?
தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என கூறுவோம். இது தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம். இதைத் தான் அல்லாஹ் தன் தூதர் மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு மாற்றமாகநாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது. அந்த அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.
தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குப் பதிலாக அர்ரஹ்மானு அக்பர்அல்லாஹு அஜல்லு என்று கூறினால் அவரது தொழுகை செல்லும்அதில் எந்தத் தவறும் இல்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகிறார்.
தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லுஅல்லாஹு அஃலமுஅர்ரஹ்மானு அக்பர்,லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக் கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம் செல்லும்.

நூல்: ஹிதாயாபாகம் 1, பக்கம் 47
அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தொழுகையில் குர்ஆன் வசனங்களை பாரசீக மொழிவங்காள மொழி என எந்த மொழியில் ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே.

(பார்க்க: நூல் ஹிதாயாபாகம்: 1, பக்கம் 47)
அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. யாருக்காகத் தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமாஅவன் ஏற்றுக் கொள்வானா என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.
அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப் பின்பற்றும் மத்ஹப்வாதிகள் தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களாஇறைவனின் உண்மையான அடியார்கள்நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.


உளூவில் ஒரு வினோத சட்டம்

ஒருவர் உளூ செய்யும் போது ஒரு உறுப்பைக் கழுவ மறந்து விடுகின்றார். அது எந்த உறுப்பு?கையாகாலாஅல்லது முகமா என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?
அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும் என்று சாதாரண அறிவுள்ள யாரும் எளிதாகப் பதிலளித்து விடுவார். இதற்குப் பெரிதாக மார்க்க அறிவு இருக்க வேண்டும் என்பதில்லை. சந்தேகம் ஏற்பட்டு விட்டால் சந்தேகத்தைக் கைவிட்டுசந்தேகமற்ற காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளதால் இது தான் மார்க்கத்தின் நிலைப்பாடுமாகும். ஆனால்  இதற்குப் பதிலளிக்கப் புகுந்த ஹனபி மத்ஹப் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.
 (உளுவில்) அவன் ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்பதை அறிந்தால்அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுவ வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும்
நூல்: துர்ருல் முக்தார்

பாகம் 1 பக்கம் 150
உளூவின் போது கழுவப்பட வேண்டிய உறுப்புகளில் எந்த உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் கொண்டாலும் இடது காலைக் கழுவி விட்டு கூலாகச் சென்று விடலாமாம். இது தான் ஹனபி மத்ஹபின் சட்டம்.
இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரத்தைக் குறிப்பிடுவார்களாநிச்சயம் இதற்கான ஆதாரத்தை அவற்றிலிருந்து காட்ட முடியாது.
ஒருவர் முகத்தைக் கழுவ மறந்திருப்பார்மற்றொருவர் கையைக் கழுவ மறந்திருப்பார் இந்த இரண்டிற்கும் இடது காலைக் கழுவுவது எப்படிப் பரிகாரமாக அமையும்இறைவனோ,இறைத்தூதரோ கூறியிருந்தால் இது பரிகாரமாக அமையுமே ஒழிய வேறு யார் கூறினாலும் பரிகாரமாகாது.
மேலும் இத்தகைய வினோத தீர்ப்புக்கு, "இதுதான் அவனுடைய கடைசிச் செயல்என்பதையே காரணமாகக் கூறுகின்றார்கள். கடைசிச் செயலுக்கும்மறந்த காரியத்திற்கும் என்ன சம்பந்தம்?சொல்லப் போனால் கடைசியாகச் செய்த காரியம் தான் மறக்காமல் இருக்கும்.

தொழுகையில் ஒருவர் ஒரு காரியத்தை மறந்துஅது ருகூவாஸஜ்தாவா என்றும் தெரியவில்லை எனில் அவர் ஸலாம் கூறவேண்டும். ஏனெனில் இதுவே அவரின் கடைசிச் செயல் என்று பதிலளிப்பார்களா?
இது கொஞ்சமும் பொருத்தமற்றமார்க்க ஆதாரமற்ற (மத்ஹபு) சட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ருகூவு செய்யும் முறை
மத்ஹப் வழி
ருகூவில் சீராக இருக்காமல் தலையைச் சிறிது தாழ்த்தினாலே அபூஹனிபாவிடம் தொழுகை கூடும் என்பதே தெளிவான பதிலாகும்.
நூல்: ரத்துல் முக்தார்

பாகம் 3 பக்கம் 392
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்த வேண்டும் என்பதில்லை. மாறாக சிறிது தாழ்த்தினாலே போதும் என ஹனபி மத்ஹப் சட்டம் சொல்கின்றது.
மாநபி வழி
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்திமுதுகை நேராக வைக்க வேண்டும் என்று நபிவழி கூறுகின்றது. எந்த அளவிற்குத் தலையைத் தாழ்த்துகிறோமோ அதைப் பொறுத்து தான் நமது முதுகு வளைவின்றி நேராகசீராக அமையும். இந்தச் சீரான அமைப்பு இல்லையெனில் தொழுகை கூடாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ருகூவிலும்ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்லிவிட்டு, "திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே எனக்கு கற்றுத் தாருங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும்தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்திநிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 757
ருகூவை பூரணமாகச் செய்யாதவனை தொழுகையில் திருடுபவன் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: அஹ்மத் 11106
இன்னும் இதுபோல் ஏராளமான ஹதீஸ்கள்நன்றாகக் குனிந்து ருகூவு செய்வதை வலியுறுத்துவதுடன் அவ்வாறில்லையெனில் தொழுகை கூடாது என்றும் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) எந்தத் தொழுகையைக் கூடாது என்று கூறினார்களோ அந்தத் தொழுகையைக் கூடும் எனக் கூறி நமது தொழுகைகளைப் பாழாக்கும் மத்ஹபுகள் இனியும் தேவையாமத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.


நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்                
கிரகணத் தொழுகையில் குத்பா  மாநபி வழி
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறும் வகையில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற தொழுகை முறையிலிருந்து சற்று வேறுபடும் அந்தத் தொழுகைகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகுற காட்டித் தந்துள்ளார்கள்.
மற்ற தொழுகைகளில் ஒரு ரக்அத்தில் ஒரு ருகூவு செய்ய வேண்டும். ஆனால் இந்தத் தொழுகையில் இரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். தொழுகை முடிந்த பிறகு குத்பா எனும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்பது நபிகளார் காட்டிய நல்வழி.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம்  முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்  ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.  (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 1046
இது போன்ற இன்னும் ஏராளமான நபிமொழிகளில் கிரகணத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு நபிகளார் குத்பா உரையாற்றியதாக இடம் பெற்றுள்ளது. இதுவே நபிவழி. ஆனால் குத்பாவைப் பற்றி ஹனபி மத்ஹபு கூறுவதென்ன?
மத்ஹபு வழி
கிரகணத் தொழுகையில் குத்பா கிடையாது. ஏனென்றால் அவ்வாறு ஹதீஸ் பதிவுசெய்யப்படவில்லை.
(ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 88)
கிரகணத் தொழுகைகளில் நபிகளார் குத்பா உரையாற்றியதாக புகாரியில், இன்னும் பிற நூல்களில் வந்துள்ள செய்திகள் ஹதீஸ்கள் இல்லையா? நபிவழியைக் கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் அமைக்கப்படவில்லை என்பதற்கு இது போதுமான சான்றாகும்.
மஃரிப் தொழுகையின் முன் சுன்னத்
மத்ஹபு வழி
தமிழகத்தில் உள்ள அதிகமான பள்ளிவாசல்களில் ஐந்து நேரத் தொழுகைகளின் பாங்கு, இகாமத் சொல்லப்படும் நேர அட்டவணையை சிறு கரும்பலகையில் எழுதியிருப்பார்கள். அதில் ஒவ்வொரு நேரத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத் சொல்லப்படுவதற்கும் இடையில் 15, 20 நிமிட இடைவேளை விடப்பட்டிருக்கும். ஆனால் மக்ரிபு தொழுகைக்கு மாத்திரம் "பாங்கு: 6.30, இகாமத்: உடன்' என்று எழுதியிருப்பர். குறித்த நேரத்தில் பாங்கு சொல்லி முடித்த உடன் சற்றும் தாமதிக்காமல் இகாமத் சொல்லத் துவங்கி விடுவார்கள். இது தான் பெரும்பாலான மத்ஹப் பள்ளிவாசல்களில் நடைபெறும். இதற்குக் காரணம் மக்ரிபிற்கு முன், சுன்னத்தான தொழுகைகள் ஏதும் இல்லை என மத்ஹப் கூறுகின்றது.
சூரியன் மறைந்த பிறகு ஃபர்ளு தொழுவதற்கு முன்னால் எந்த உபரியான தொழுகைகளும் நிறைவேற்றப்படாது. அதன் காரணமாக மஃரிப் தாமதமாகிவிடும் என்பதினால்.
(ஹிதாயா, பாகம் : 1 பக்கம் : 41)
மாநபி வழி
ஆனால் மாநபி வழிமுறையைப் பாருங்கள்:
அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்'' (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, "இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்'' என்றார்கள்.
(புகாரி 1183)
மக்ரிபின் முன் சுன்னத்தைத் தொழ விரும்புவர்களுக்கு அதற்கான இடைவெளியை, கால அவகாசத்தை அளிப்பது தான் நபிவழி என்பதை இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதற்கான நேரத்தை அளிக்காமல் உடனடியாக ஜமாஅத் தொழுகையை ஆரம்பிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?
முன் சுன்னத் தொழுவதால் மக்ரிப் தாமதமாகி விடும் என்ற காரணம் இங்கு கூறப்படுகின்றது. படித்த உடனே இது பொய்யான காரணம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 10 நிமிட இடைவெளி விடுவதால் எப்படி மக்ரிப் தொழுகை தாமதாகும் என்பதை இந்தச் சட்ட வல்லுனர்கள் (?) சிந்திக்கவில்லை போலும். என்ன காரணம் கூறப்பட்டாலும் அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்த ஒரு காரியத்தை, வணக்கத்தைத் தடை செய்யும் அதிகாரம் உலகில் வேறு யாருக்கும் இல்லை என்பதைப் புரிந்து மத்ஹபினர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
நபிவழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள்
குர்ஆன், ஹதீஸை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்; அவையல்லாத வேறு எதையும், யாரையும் பின்பற்றக் கூடாது. நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டியாக மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இதையே தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டு, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இன்றளவும் நிலைமாறாமல் இறையருளால் நிலைத்து நிற்கின்றது.
ஆனால் சில போலி தவ்ஹீத்வாதிகளும், மத்ஹபைச் சார்ந்தவர்களும் ஸஹாபக்களைப் பின்பற்றலாம், அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டி என்பதால் அவர்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாமவர்களின் முகமூடியையும், இரண்டாமவர்களின் அறியாமையையும் விளக்கக்கூடிய வகையில் நாம் பதிலளித்து இருக்கிறோம், இன்றும் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தனி விஷயம்.
ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபினர் மக்ரிபின் முன் சுன்னத் விஷயத்தில் ஸஹாபாக்கள் நிலையைப் பார்க்கத் தவறிவிட்டார்களே? என்பதையே இப்போது கேள்வியாக முன்வைக்கின்றோம்.
நபித்தோழர்கள் நபிவழி அடிப்படையில் மக்ரிபின் முன் சுன்னத் தொழுபவர்களாகவும், தொழ விரும்புபவர்களுக்கு அவகாசம் அளிப்பவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித் தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
(முஸ்லிம் 1521)
மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, "அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்'' என்று விடையளித்தார்கள். "இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் "அலுவல்களே காரணம்'' என்றார்கள்.
(புகாரி 1184)
இவர்கள் நபித்தோழர்களை மதிப்பதாக, பின்பற்றுவதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள், வெற்று ஜாலங்கள் என்பதும், மேலும் இவர்கள் யாரை இமாம்களாகக் கருதுகின்றார்களோ அவர்களை நபித்தோழர்களை விட சிறப்புக்குரியவர்களாக மதிக்கின்றார்கள், நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது.
தொழுகையை முடிக்கும் ஸலாம்
நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபுகளின் பெயரால் தொழுகையை முறை தவறித் தொழுது, தங்கள் நன்மைகளைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொழுகையின் பல செயல்களில் நபிவழிக்கு மாற்றமான முறையை மத்ஹபுகள் போதிப்பதே இதற்குக் காரணம். தொழுகையின் ஆரம்ப தக்பீரிலிருந்து ஸலாம் வரை நபிவழிக்கு முரணாண பல காரியங்களை மத்ஹபுகள் போதிக்கின்றன.
வேற்று மொழிகளில் தொழுகையைத் துவக்கலாம், அர்ரஹ்மானு அக்பர் என்று சொல்லலாம், ருகூவின் போது லேசாக தலையைத் தாழ்த்தினாலே போதும் என்பன போன்ற மார்க்கம் அனுமதிக்காத பல விஷயங்களை மத்ஹபு அனுமதித்து இருந்ததை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இப்போது ஸலாம் கூறும் முறையில் நபிவழியுடன் மத்ஹபு எவ்வாறு முரண்படுகின்றது என்பதை காண்போம்.
நபிவழி
நாம் தொழுகையின் முடிவில் ஸலாம் கொடுக்கும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுகிறோம். இதுவே நபிவழி. இந்த நபிவழி அடிப்படையில் தான் அனைத்து முஸ்லிம்களும் தொழுது வருகிறோம். சிறு குழந்தைகள் கூட ஸலாம் கூறும் முறையை சரியாகக் கடைபிடிப்பதை இன்றளவும் பள்ளிவாசல்களில் காணலாம்.
வலது புறமும், இடது புறமும் திரும்பி "அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்'' என்று நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்: திர்மிதீ (272), அபூதாவூத் (845)
ஸலாம் கொடுக்கும் முறை இது தான் என்பதில் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மத்ஹபு வழி
இரண்டு தடவை அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கூறுவது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும். இரண்டாவது தடவை வாஜிபாகும். அலைக்கும் என்பது கடமையன்று.
(துர்ருல் முக்தார், பாகம் : 1 பக்கம் : 504)
மேற்கண்ட வார்த்தைகளின் விளக்கமென்ன?
ஸலாம் கூறும் போது இரண்டு தடவை அஸ்ஸலாம் என்று சொல்வது தான் கடமை; அலைக்கும் என்று சொல்வது அவசியமில்லை என மேற்கண்ட மத்ஹபு சட்டத்தில் கூறப்படுகின்றது. அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துள்ளார்களா? அல்லது  அவ்வாறு முடிக்கலாம் என்று அனுமதித்துள்ளார்களா?இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் தங்கள் பள்ளிகளில் இவ்வாறு ஸலாம் கூறி தங்கள் இமாம்கள் இயற்றிய மத்ஹபு சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்களா?
"அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று நபிகளார் கூறியதில் அஸ்ஸலாமையும் அலைக்கும் என்பதையும் வித்தியாசப்படுத்த என்ன அடிப்படை? இக்கேள்விகளுக்கு மத்ஹபைப் பின்பற்றுவோர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இச்சட்டத்திற்குத் தங்கள் மனோஇச்சைகளைத் தவிர மார்க்க ஆதாரம் ஏதும் இல்லை.
அது சரி! வேண்டுமென காற்று பிரித்தும், ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தும் தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே! மத்ஹபைப் பின்பற்றுவோர் சிந்திக்கட்டும்.
பாங்கிற்காக எழுந்து நிற்பது
நபிவழி
யாருக்காகவும், எதற்காகவும் எழுந்து நிற்பது என்ற கலாச்சாரத்தை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. நம்மை ஒரு ஜனாஸா கடந்து சென்றால் நம்மைக் கடக்கும் வரை அதற்காக மட்டும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டுள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவுமில்லை, கட்டளையிடவுமில்லை.
மத்ஹபு வழி
ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தாரில் பாங்கு சொல்லப்படும் போது எழுந்து நிற்பது சிறப்புக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்கு சப்தத்தைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும்
(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 397)
இதற்கான ஆதாரம் நபிவழியில் எங்கே இருக்கிறது? நபியவர்கள் கூறாத ஒன்றை மார்க்கம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை உணர்வார்களா?
பள்ளியைக் கட்டியவருக்கே பாங்கு இகாமத் உரிமை
மத்ஹபு வழி
பள்ளிவாயிலைக் கட்டியவருக்குத் தான் பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் அதிகாரம் உண்டு. இது பொதுவானதாகும். (அவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை) இமாமத் செய்யும் அதிகாரமும் அவருக்கே உரியது. (இது பொதுவானதன்று) அவர் நேர்மையாளராக இருக்க வேண்டும்.
(துர்ருல் முக்தார், பாகம் : 1, பக்கம் 431)
மாநபி வழி
ஒருவர் பள்ளிவாயிலைக் கட்டினால் அதற்குரிய கூலி அல்லாஹ்விடம் அவருக்கு உண்டு. ஆனால் பள்ளிவாசலில் அவருக்கென்று பிரத்தியேகமான எந்த உரிமையும் கிடையாது.
ஏனெனில் "நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
(72:18)
அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிவாசல் என்று ஆகும்போது அவனது அடியார்கள் அனைவருக்கும் அதில் சமமான உரிமைகள் உள்ளன. இஸ்லாம் காட்டக்கூடிய வழிமுறைப் பிரகாரம் முஸ்லிம்கள் தமக்கென ஒரு தலைவரைத் தேர்வு செய்வார்கள். அந்தத் தலைவர் இஸ்லாம் கூறக்கூடிய தகுதிகளின் அடிப்படையில் பாங்கு சொல்பவரை, தொழுகை நடத்துபவரை ஏற்பாடு செய்வார். இதுதான் இஸ்லாம் காட்டக்கூடிய வழிகாட்டுதல் ஆகும். பள்ளிவாசலைக் கட்டியவருக்கு அதிகப்படியாக உரிமைகள் இருப்பதாக அல்லாஹ்வோ அவனது தூதரோ நமக்குக் கூறவில்லை.
பள்ளிவாசலைக் கட்டியவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பு உரிமை அவரோடு முடிந்து விடப்போவதில்லை. மாறாக பரம்பரை பரம்பரையாக இந்த உரிமை தொடருமாம்.
பள்ளிவாசலைக் கட்டியவரின் மகனும் அவனது குடும்பத்தினரும் மற்றவர்களை விட அதிக உரிமை படைத்தவர்கள்.
ரத்துல் முக்தார், பாகம் 3, பக்கம் 241
இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இது மாநபி வழியில் அமைந்த சட்டம் என்று கருதமுடியுமா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்
கல்லில் தயம்மம் செய்தல்
நபிவழி
உளூ செய்வதற்காகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை நேரும் போது தயம்மும் என்ற முறையை இறைவன் மாற்றுப் பரிகாரமாக ஆக்கியுள்ளான். தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து முகத்தையும்,கையையும் தடவுவதே தயம்மும் எனப்படும். மண்ணில் தயம்மும் செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும்,மன்னிப்பவனாகவும் இருக்கிறான். 
(அல்குர்ஆன் 4:43)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
மத்ஹபு வழி
குர்ஆனின் இவ்வசனங்களுக்கு எதிராகக் கல், மரகதம் போன்றவற்றிலும் தயம்மும் செய்யலாம் என மத்ஹபு போதிக்கின்றது.
மண், கல், சாந்து, ஜல்லிக் கல், சுர்மா, மரகதம் போன்ற பூமியின் வகையைச் சார்ந்த அனைத்தின் மூலம் தயம்மம் செய்வது இமாம் அபூஹனிபா மற்றும் (அவரது மாணவர்) முஹம்மத் ஆகியோரிடம் அனுமதியாகும்.
நூல் : ஷரஹ் ஹிதாயா, பாகம் 1, பக்கம் 194
மண் என்பது உதிரியாகக் கிடந்தாலும், அல்லது ஒன்று சேர்ந்து திரளாக, கட்டியாக இருந்தாலும் அதில் தயம்மும் செய்வது குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாக ஆகாது. ஆனால் எந்த அடிப்படையில் கல்லில் தயம்மும் செய்யலாம் என்று இமாம் அபூஹனிபா சட்டம் எடுத்தார்? மரகதம், ஜல்லிக்கல் ஆகியவற்றிலும் தயம்மும் செய்யலாம் என்றால் அதற்கு ஆதாரம் என்ன? அவை மண்ணின் வகையைச் சார்ந்ததா?
தயம்மும் செய்ய ஏற்ற பொருள் தூய்மையான மண் என்று இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது கல்,மரகதம் ஆகியவற்றையும் அதில் சேர்த்திருப்பது நபிவழிக்குப் பொருத்தமானதா? இது போலவே மத்ஹபுச் சட்டங்களில் அதிகமானவை குர்ஆன், நபிவழிக்கு முரணாகவே உள்ளன என்பதை மத்ஹபின் விசுவாசிகள் உணர வேண்டும்.

தடை செய்யப்பட்ட உறவுகள்
மாநபிவழி
இஸ்லாத்தின் பார்வையில் சில உறவுகள் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணம் செய்ய விலக்கப்பட்ட அவர்கள் யார்? யார்? என்ற விவரம் முழுவதையும் இறைவனும்,இறைத்தூதரும் நமக்கு விளக்கி விட்டார்கள். அதன் விவரம் வருமாறு:
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள்,உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள்,ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:23
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: புகாரி 5108
இவர்களே திருமணம் புரிய தடை செய்யப்பட்ட உறவுகள் ஆவர். இந்நிலையில் மத்ஹபு யாரையெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றது? அது மார்க்கத்தின் பார்வையில் சரிதானா? என்பதை இப்போது பார்ப்போம்.
மத்ஹபு வழி
இச்சையுடன் தொட்ட பெண்
இச்சையுடன் ஒரு பெண், ஓர் ஆணைத் தொட்டால், தொட்டவளின் தாயும், மகளும் அவனுக்குத் தடையாகி விடுவர். (அதாவது அவ்விருவரையும் அவன் திருமணம் முடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது) 
நூல்: ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 192
ஒரு பெண், ஓர் ஆணை இச்சையுடன் தான் தொடுகின்றாளா? அல்லது சாதாரணமாகத் தொடுகின்றாளா? என்பதை அவனால் எப்படி அறிந்து கொள்ள இயலும் என்ற கேள்விக்குள் செல்லாமல் இதை நபிகளார் கூறினார்களா? அதற்கான ஆதாரம் எங்கே? என்பதே நமது கேள்வி. இது மாத்திரம் அல்ல. மத்ஹபின் பார்வையில் இன்னும் சில பட்டியல் உள்ளது.
தலைமுடியைத் தொட்டாலே தடை
 (தான் மணமுடித்த பெண்ணின் தாயை (மாமியாரை) ஒருவர் திருமணம் செய்வது தடையாகும் என்ற) திருமணச் சட்டத்தின் படி தன்னால் விபச்சாரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயைத் திருமணம் முடிப்பது இவனுக்குத் தடையாகும். (ஜினா என்றால் தவறான உறவு) இவன் இச்சையுடன் தொட்ட பெண்ணின் தாயை இவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவன் தொட்ட பகுதி உஷ்ணத்தைத் தடுக்காத திரையுடன் கூடிய தலையின் ஒரு முடியாக இருந்தாலும் சரியே! திருமணம் முடிக்கத் தடை தான்! அவனைத் தொட்டு விட்ட பெண்ணின் தாயையும் அவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவனது ஆணுறுப்பைப் பார்த்தவளின் தாயும் அவனுக்குத் தடை! அவன் எவளது வட்ட உள்ளுறுப்பைப் பார்த்தானோ அவளது தாயும் இவனுக்குத் தடை! அவளது உறுப்பை அவன் கண்ணாடியிலோ அல்லது அவள் தண்ணீரில் நிற்கும் போது பார்த்தாலும் சரி! அவளது தாய் அவனுக்குத் தடை தான். மேற்கண்ட பெண்ணின் தாய் அவனுக்குத் தடையானது போல், அவளது மகளும் அவனுக்குத் திருமணம் முடிக்கத் தடை!
(நூல்: துர்ருல் முக்தார்  பாகம் 3, பக்கம் 32)
இவைகளுக்கெல்லாம் மூல ஆதாரங்கள் எவை? இறை வார்த்தையா? நபிகளாரின் விளக்கமா?
முடியைத் தொட்டாலும் திருமணத் தடை ஏற்படும் என்று திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் உள்ளது?எந்த ஹதீஸிலிருந்து இந்தச் சட்டத்தை எடுத்தார்கள்? மத்ஹபை ஆதரிக்கும் போலி உலமாக்களும்,அவர்களை நம்பும் அறிவிலிகளும் பதில் சொல்வார்களா?
மதுபான விற்பனை
மாநபி வழி
இஸ்லாத்தில் போதை தரக்கூடிய பொருட்கள் அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. போதை தரும் மதுபானம் உட்கொள்ளவும், விற்கவும் தடை செய்யப்பட்டவைகளில் ஒன்று. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நான், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரலி,
நூல்: புகாரி 6124
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்,
நூல்: புகாரி 4296
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்'' என்று கூறினார்கள்.  அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்'' எனக் கேட்கப்பட்டது.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கூடாது! அது ஹராம்!'' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, "அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 2236
இந்த செய்திகள் மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்றும், மீறி விற்றால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் மார்க்கம் எச்சரிக்கின்றது. நபிகளாரின் இந்த எச்சரிக்கைகளை மனதில் நிறுத்திக் கொண்டு இது தொடர்பான மத்ஹபு சட்டத்தைக் காண்போம்.
மத்ஹபு வழி
ஒரு முஸ்லிம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார்.  இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும். 
(ஹிதாயா, பாகம் 2, பக்கம் 41)
மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்று ஏராளமான நபிமொழிகள் எச்சரித்த பிறகும் இப்படி ஒரு சட்டத்தை ஹனபி மத்ஹபு போதிக்கின்றது.
ஒரு முஸ்லிம் நேரடியாக சாராயக்கடை வைத்து விற்பனை செய்யாமல் கிறித்தவரின் மூலம் கடை வைத்து மதுபானத்தை விற்பனை செய்யலாம் என்று சொல்கின்றார்களே! இதற்கு என்ன ஆதாரம்?மத்ஹபில் கூறப்பட்டுள்ள இந்தச் சட்டம் எந்த நபிமொழியை, குர்ஆன் வசனத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது? மத்ஹபை பின்பற்றுவோர் பதிலளிப்பார்களா?
மதுவில் கறி சமைத்தல்
மதுவில் சமைக்கப்பட்ட இறைச்சி மூன்று தடவை கொதிக்க வைக்கப்பட்டு ஆற வைக்கப்பட்டால் தூய்மையாகிவிடும்
(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 361)
மதுவில் கறியைப் போட்டு மூன்று தடவை கொதிக்க வைத்து, ஆற வைத்தால் அந்த மதுக் குழம்பை (கறிக்குழம்பு போன்று மதுக்குழம்பு) சாப்பிடலாம் என்று ஹனபி மத்ஹபு சொல்கின்றது. இதற்கு என்ன ஆதாரம்?
மது ஹராம் என்று ஆன பிறகு அதை வைத்துக் குழம்பு செய்யலாம் என்று ஐடியா சொல்லித் தரும் மத்ஹபு நம்மை இறைவழியில், நேரிய பாதையில் அழைத்துச் செல்லுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படியே போனால் ஜம்ஜம் நீரில் பன்றிக் கறியை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அது தூய்மையாகி விடும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு சட்டம் போதிக்கும் மத்ஹபை,மத்ஹபின் இமாம்களைப் பின்பற்றினால் இறைவன் தடுத்த ஒன்றை ஆகுமாக்குதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிவு பெற்றவர்களாக, தந்திரம் செய்யும் தந்திரக்காரர்களாக மாறிவிடுவோம். எனவே நபிவழிக்கு முரணாண மத்ஹபைப் பின்பற்றுவதிலிருந்து விலகிடுவோமாக!
குதிரைக் கறி
மாநபி வழி
குதிரைக் கறியை உண்பது மார்க்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் அதை உண்ண அனுமதி வழங்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதைகüன் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-),
நூல்: புகாரி 4219
பல ஸஹாபாக்கள் குதிரைக் கறியை மார்க்கம் அனுமதித்த காரணத்தால் சாப்பிட்டிருக்கின்றார்கள்.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (நஹ்ர் செய்து) அதை உண்டோம்.
நூல்: புகாரி 5510
இது பற்றி மத்ஹபு சொல்வதென்ன? பாருங்கள்.
மத்ஹபு வழி
குதிரை இறைச்சியை சாப்பிடுவது அபூஹனீஃபாவிடம் மக்ரூஹ் ஆகும். இதுவே மாலிக் இமாமின் கருத்து.
(நூல்: ஹிதாயா, பாகம் : 4, பக்கம் 68)
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைக் கறியை உண்ண அனுமதி அளித்த பிறகு இமாம் அபூஹனிஃபா, இமாம் மாலிக் ஆகியோர் வெறுக்கத்தக்கது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இறைத்தூதர் என்பார் தம் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை அனுமதிக்கவோ, தடை செய்யவோ முடியாது. இறைத்தூதர் ஒன்றை அனுமதி அளித்தால் அது இறைவன் அனுமதி அளிப்பதைப் போன்றதாகும். இறைத்தூதர் ஒன்றைத் தடை செய்தால் அது இறைவன் தடை செய்வதைப் போன்றதாகும். இந்தக் கருத்தை குர்ஆனில் பல இடங்களில் இறைவன் தெளிவுபடக் கூறியிருக்கின்றான்.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.
அல்குர்ஆன் 7 : 157
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை.. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:3,4,5
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 59:7
இந்த வசனங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் அவர்கள் ஒன்றை அனுமதித்தால் அதை இறைவன் அனுமதிக்கின்றான் என்று பொருள். எனவே குதிரைக் கறியை உண்ண நபிகள் நாயகம் அனுமதித்தது இறைவன் அளித்த அனுமதியையே அவர்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.
இறைவன் இதை அனுமதிக்கும் போது இமாம் அபூஹனிபா அதை வெறுக்கத்தக்கது என்று கூற அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்?
மார்க்கத்தில் ஒரு காரியத்தை அனுமதிக்கவோ, தடை செய்யவோ, இது நல்லது, இது கெட்டது என்று சொல்லவோ இறைவன் ஒருவனே அதிகாரம் படைத்தவன். இறைவனின் தூதர்களுக்கே இந்த அதிகாரம் இல்லை எனும் போது இதை அபூஹனிஃபா கையிலெடுத்து, குதிரைக் கறியை உண்பது வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றார். இது நபிவழியை மீறும் காரியம். மத்ஹபுகள் நபிவழியுடன் மோதக்கூடியதாகவே இருக்கின்றது என்பதை இது மீண்டும் நிரூபணம் செய்கின்றது.
வாகனத்தில் வித்ர் தொழுவது
மத்ஹபு வழி
வாகனத்தில் வித்ர் தொழுவது கூடாது என அபூஹனிஃபா மற்றும் அவரது சகாக்கள் கூறுகின்றனர்.
நூல்: ஷரஹ் அபூதாவூத்
பாகம் 5 பக்கம் 92
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத் தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் ரலி
நூல்: புகாரி 1000
நபியவர்கள் தமது வாகனத்தில் வித்ர் தொழுவார்கள் என்று இந்தச் செய்தி தெளிவாகக் கூறுகின்றது.  ஆனால் நபிகளாரின் இந்தச் செயலுக்கு முரணாக ஹனபி மத்ஹபு கூடாது என்று சட்டம் சொல்கின்றது. மத்ஹபு சட்டங்கள் நபிவழிக்கு முரணாணவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் இதன் மூலம் தெளிவாகின்றது.
தீண்டாமை
மாநபி வழி
இஸ்லாத்தில் தீண்டாமை, கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதை முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதோர் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆதலால் தான் இன்றளவும் பலர் சாதிக் கொடுமையிலிருந்து மீள இனிப்பை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளை போன்று இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இன, குல, மொழி அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு அறவே காட்டக்கூடாது என்ற பிரச்சாரம் இஸ்லாத்தின் அடிநாதம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள்  அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 22391
குலம், கோத்திரம் என்பது மனிதர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளத் தானே தவிர ஏற்றத்தாழ்வு கற்பிக்க அல்ல என்று குர்ஆன் கர்ஜிக்கின்றது. அது மட்டுமல்ல! இறைவனை அஞ்சக்கூடியவர்களே இறைவனிடத்தில் உயர்ந்தவர் என்றும் கூறுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
இறையச்சம் தான் ஒரு மனிதனை இறைவனிடத்தில் உயர்த்துமே தவிர அவனுடைய பிறப்பு,செல்வம், குலம், கோத்திரம் எதுவும் இறைவனிடத்தில் அவனை உயர்த்தாது என்பதை இவற்றிலிருந்து அறியலாம். இதுவே நபிவழி. ஆனால்...
மத்ஹபு வழி ?
அரபி அல்லாதவன் அரபிக்கு நிகரானவனாக மாட்டான். அரபி அல்லாதவன் ஆலிமாக இருந்தாலும் அல்லது அரசனாக இருந்தாலும் சரியே. இதுவே மிகச்சரியானதாகும்.
(துர்ருல் முஹ்தார், பாகம் : 3, பக்கம் : 101)
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது?
தீண்டாமையை ஒழித்துகட்டி, மண்ணோடு மண்ணாக புதைத்து விட்ட இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் மத்ஹபு கூறும் இச்சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க முயலும் மத்ஹபை மக்கள் தூக்கி எறிவது அவசியம் என்பதை இக்கருத்து உறுதி செய்கின்றது.

No comments:

Post a Comment