Thursday 31 May 2012

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-2

part-2
மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)


ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்லின் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(
முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)

இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

No comments:

Post a Comment