Sunday 16 December 2012

இஸ்லாம் கூறும் இறுதி நாள் (21.12.2012 ல் உலகம் அழியுமா?)


بسم الله الر حمن الرحيم
இஸ்லாம் கூறும் இறுதி நாள்
 (21.12.2012 ல் உலகம் அழியுமா?)
யாசர் அரபாத்,மங்கலம்.
    உலக மக்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக குறிப்பட்ட ஒரு நாளில் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அதில் சமீபத்தில்
21.12.2012 அன்று உலகம் அழியப்போகிறது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றி நாம் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ள  இருக்கிறோம்.
உலகம் அழிவு நிச்சயம்
           
உலக அழிவு சம்மந்தமாக மற்ற மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் உலக அழிவு என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர் ஆறு விஷயங்களை கட்டாயமாக நம்ப வேண்டும்.
1. அல்லாஹ்வை நம்புதல்.
2.மலக்குமார்களை நம்புதல்
3.வேதங்களை நம்புதல்
4.தூதர்களை நம்புதல்
5.விதியை நம்புதல்
6. உலகம் அழிக்கப்பட்டு அனைவரும் அல்லாஹ்வின் முன் எழுப்பப்படும் மறுமையை நம்புதல்.
எனவே உலகம் அழியும் என்பதை இஸ்லாம் அடிப்படை கொள்கையாக வைத்துள்ளது.
உலக அழிவை மறுப்பவன் நரகவாசி:

       
உலகம் அழியும் என்பதை யார் மறுக்கிறார்களோ அவர்கள் நரகவாசி என்பதாக அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

50. "அவனது வேதனை இரவிலோ, பகலிலோ, உங்களிடம் வந்தால் (என்னவாகும்) என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! குற்றவாளிகள் எதற்கு அவசரப்படுகின்றனர்?'' என்று கேட்பீராக!
51. அது நிகழ்ந்த பிறகு தான் அதை நம்புவீர்களா? "இப்போது தானா (நம்புவீர்கள்?) இதைத் தானே அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?'' (என்று கூறப்படும்.)
52. பின்னர் "நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! நீங்கள் செய்ததற்காகவே தவிர தண்டிக்கப்படுவீர்களா? என்று அநீதி இழைத்தோருக்குக் கூறப்படும்.
அல்குர்ஆன்: 10:50,51,52.
இந்த வசனத்தின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் உலகம் அழியும் என்பதை உறுதியாக எடுத்துரைக்கிறது.
மாயன் நாகரீகம் (mayan civilization):
    
பண்டைய காலங்களில் உலகம் முழுவதும் வாழ்ந்த மக்களின் கட்டிடக்கலை, விவசாயம், கணித முறை, தொழில் முறை ஆகியவற்றை நாகரீகம்(civilization) மூலம் அறிந்து கொள்ளலாம்.
நம்முடைய இந்திய நாட்டில் சிந்து சமவெளி நாகரீகம் போன்றவைகள் பிரபலியமான நாகரீக முறையாகும்.இதே போல் மெக்ஸிகோ,கவுதமாலா போன்ற நாடுகளில் வாழ்ந்த பண்டைய கால மக்களின் நாகரீகம் மாயன் நாகரீகம் என்றழைக்கப்படுகிறது.
மாயன் காலண்டர்:
            மாயன் நாகரீகத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்திய நாட்காட்டிக்கு மாயன் காலண்டர் என்று சொல்லப்படுகிறது. 21.12.2012 அன்று  உலகம் அழியும் என்ற பொய்க்கு ஆதாரமாக மாயன் காலண்டர் என்ற ஒன்று செய்திகளிலும்,நாளிதழ்களிலும் காட்டப்படுகிறது. மாயன் என்ற காலண்டரை 2012 என்ற ஹாலிவுட்  திரைப்படம் சமீப காலத்தில் பிரபலப்படுத்தியது. மாயன் நாட்காட்டி 21.12.2012  முடிவு பெறுவதால் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி பரப்பப்படுகிறது.
(ஆனால் மாயன் நாட்காட்டி உலகம் அழிவதாக சொல்லவில்லை). மேலும் இதற்க்கு அறிவியல் ரீதியாகம் உண்மை இருக்கிறது என்ற செய்தி சொல்லப்படுகிறது.ஆனால் இந்த
செய்தியை NASA மறுத்துள்ளது.
இறுதி நாளை இறைவனே அறிவான்:
உலகம் எப்போது அழியும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதை திருமறையில் இறைவன் கூறுகிறான்.
   (முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?                        அல்குர்ஆன்: 33:63

உலகம் எப்போது அழியும் என்பது நபிகள் நாயகம் அவர்களுக்கும்   தெரியாத ஒன்று என்று இறைவன் மேற்கூறிய அல்லாஹ் வசனத்தில் கூறுகிறான்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். அல்குர்ஆன்: 31.34

42. (முஹம்மதே!) அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.      
                                                             அல்குர்ஆன்: 79:41,42,43


 இந்த வசனங்களின் அடிப்படையில் உலகம் எப்போது அழியும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பது தெளிவாகிறது.
உலக அழிவு சம்மந்தாமாக இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத பெயர் தாங்கி இஸ்லாமிய மக்களும் கூட இது போன்ற புரலைகளை நம்பி ஈமானை இழக்கிறார்கள். உலகம் எப்போது அழியும் என்பதை ஜோசியம் போல் யார் சொன்னாலும் நம்பாமல் அந்த அறிவு இறைவனிடம் மட்டும் உள்ளது என்பதை அறிந்து நம் ஈமானை பலப்படுத்த வேண்டும்.
21.12.2012 ல் உலகம் அழியுமா?
     உலக அழிவு பற்றிய அறிவு இறைவனிடம் இருந்தாலும் இறைவன் அதற்கான மிகப்பெரிய பத்து அடையாளங்களை நமக்கு கூறுகிறான்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ்மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்.

இந்த பத்து அடையாளங்கள் நிகழாமல் கண்டிப்பாக உலக அழிவு ஏற்படாது.

மேலும் உலக அழிவின் மிகப்பெரிய அடையாளமான தஜ்ஜாலின் வருகை பற்றி நபிகள் நாயகம் விளக்கும் போது அவன் இந்த உலகில் எத்தனை நாட்கள் வாழ்வான் என்பதயும் தெளிவு படுத்துகிறார்கள்.

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்ஒரு நாள் ஒரு மாதம் போன்றும்ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸின் அடிப்படையில் இன்னும் தஜ்ஜால் வராத காரணத்தால் உலக அழிவு நாள் என்று சொல்லப்படும்,இன்னும் 5 நாட்களே உள்ள 21.12.2012 அன்று அல்லாஹ் நாடினால் தவிர   கண்டிப்பாக உலகம் அழியாது.
ஏனென்றால் இறைவன் உண்மையை மட்டுமே சொல்வான்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அல்குர்ஆன் (4 : 87)

உலக அழிவு நாள் சம்மந்தாமாக கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பொய்கள் சொல்லப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில் 21.12.2012 அன்று உலகம் அழியாமல் இஸ்லாமிய மார்க்கம் சத்திய மார்க்கம் என்று நிரூபிக்கும் இன்ஷா அல்லாஹ்.

    

No comments:

Post a Comment