Monday, 9 July 2012

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்


நன்றி  tntj.net
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

இஃதிகாஃபின் சட்டங்கள்


நன்றி  tntj.net
இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
இஃதிகாபின் ஆரம்பம்
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)
ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இஃதிகாபின் முடிவு நேரம்
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.
பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். “இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)
“நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.
மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)
நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.
இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

ரமளான் மாதத்தின் சிறப்புகள்


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
நன்றி  tntj.net
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!
“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.
மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

Sunday, 8 July 2012

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 08.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 08.07.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 07.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 07.07.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Thursday, 5 July 2012

கடன் இருந்தால் மன்னிப்பு இல்லை

கடன் இருந்தால் மன்னிப்பு இல்லை

ம். ஷம்சுல்லுஹா
நீரின்றி அமையாது உலகு என்று சொல்வது போல் கடனின்றி அமையாது மனித வாழ்வு என்று அடித்துச் சொல்லலாம். ஆம்! மனித வாழ்வு அந்த அளவுக்குக் கடன் எனும் கடலால் சூழப்பட்டு,சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அதனால் தான் கடனைத் திரும்பச் செலுத்த முடியாவிட்டால் கடன் கொடுத்தவர் அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்று மார்க்கம் சொல்கின்றது. அல்லாமல் கடனாளிக்கு மனிதாபிமான அடிப்படையில் கால அவகாசம் கொடுத்தால் அதற்கு இரு மடங்கு நன்மைகளை அவனது பட்டியலில் பதிவு செய்கின்றது.
மனிதன் தனது கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் லாப நட்டக் கணக்கு பார்க்கின்றவன் என்ற அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ் கடன் கொடுத்தவருக்கு இந்த ஏற்பாட்டைச் செய்கிறான். மேலும் மறுமையில் அவரைத் தனது அர்ஷின் நிழலில் நிற்க வைத்து கவுரவமும் அளிக்கின்றான். சுவனத்தையும் காணிக்கையாக வழங்குகின்றான். இந்தச் செய்திகளையெல்லாம் "அழகிய கடனும் அர்ஷின் நிழலும்'' என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
இவ்வாறு கடன் கொடுத்தவரை கண்ணியமாக நடக்கச் சொல்லும் மார்க்கம், கடன் வாங்கியவருக்கு எல்லா சலுகைகளையும் கொடுத்து விட்டு விடவில்லை. கடனாளியை நோக்கி கடன் கொடுத்தவரிடம் கண்ணியமாக நடக்கச் சொல்வதோடு, கடன் கொடுத்தவருக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கச் சொல்கின்றது.
கடனை வாங்கிக் கொண்டு, எனக்கென்ன? என்று இருப்பதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை. கடனாளியின் கடமைகளையும், கடனைத் திருப்பிச் செலுத்துவதன் அவசியத்தையும் இப்போது பார்ப்போம்.
திரும்பக் கொடு! அதையும் நிரம்பக் கொடு!
கடன் எனும் சோதனையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட தப்ப முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்கின்றார். நபித்தோழர்கள் அந்த மனிதரை அதற்காகத் தாக்க முனைகின்றனர்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களை நோக்கி, "விட்டு விடுங்கள். ஏனெனில் ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
நபித் தோழர்கள், "அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2390, முஸ்லிம் 3003
நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவருக்குரிய அந்த உரிமையை வழங்கி விட்டு, வாங்கிய கடனைத் திரும்ப வழங்குகின்றார்கள். அதையும் திருப்தியாக நிரம்பவே வழங்குகின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் இந்தச் செயலில் ஒவ்வொரு கடனாளிக்கும் அழகிய முன்மாதிரியும் உரிய பாடமும் படிப்பினையும் இருக்கின்றன.
கடனை உடனே நிறைவேற்றுதல்
கடன் வாங்கியவருக்குக் கொஞ்ச நாளில் ஒரு வசதி வந்து விடும். அப்படி ஒரு வசதி வந்ததும்,அவர் வாங்கிய கடனை மருந்துக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவசியம், கட்டாயம்,இன்றியமையாத செலவு என்றிருந்தால் அதை நிறைவேற்றுவதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் அவசியமில்லாத ஒரு செலவைச் செய்து விட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தாமதப் படுத்துவதை நாம் பார்க்கிறோம்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹது மலையைப் பார்த்த போது, "இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரைக் கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன். கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 2388, முஸ்லிம் 1654
தன்னிடம் உஹது மலை அளவுக்குத் தங்கம் கிடைத்தால் அதில் கடனை அடைப்பதற்காக மட்டும் தீனாரை எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தையும் தர்மம் செய்து விடுவேன் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் வசதி வரும் போது கடனுக்கு என்றுள்ள தொகையை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் வழி காட்டுகின்றார்கள்.
கடன் ஓர் அமானிதம்

ஜும்மா நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜும்மா நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஆன்லைன் பீஜே 
பதில்
ஜும்மா நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்மா கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10
பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால் அல்லாஹ் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.
மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.
ஜும்மாவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.
நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.
நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?
நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?
நாமே செய்வதும் நம்முடைய அனுமதியில் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள்/ நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.
எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்மா பாங்கு முதல் ஜும்மா தொழுகை முடியும் வரை மூடியாக வேண்டும்.