Wednesday, 10 October 2012

குர்பானி இறைச்சியை மூன்று பங்காக பிரிக்க வேண்டுமா?


onlinepj.com
குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் (22 : 36)
இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : புகாரி (1717)
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2137)
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன். 
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)


Tuesday, 9 October 2012

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்


குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
onlinepj.com
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை. 
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3637) 
நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை. ஏனென்றால் தடைசெய்யப்பட்ட பிராணிகளின் தன்மைகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது வெளிப்புறத்தில் கொம்பு உடைந்ததை கொடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை. 
குர்பானி கொடுப்பதற்கு பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்துப் பலியிடுவது தவறானது என்று நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது பெண்ணினத்தை பலியிடக்கூடாது என்று கூறவில்லை. 
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாத போது நாமாக நிபந்தனைகளை விதிப்பது வழிகேடே. பலியிடப்பட வேண்டிய பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பெண்ணினத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறான்.
(
பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக!
ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 
அல்குர்ஆன் (6 : 143)
இறைச்சி அதிகமாகவும் ருசியாகவும் உள்ள பிராணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கையை விட ஆட்டின் தரம் தான் முக்கியம். அபூபுர்தா என்ற நபித்தோழர் தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டார். அதற்குப் பதிலாக இரண்டு ஆட்டின் இறைச்சியை விட அதிக இறைச்சியை கொண்ட ஆடு உள்ளதாக அவர் கூறியபோது இந்த ஆடே முன்பு கொடுத்த ஆட்டைவிட சிறந்தது என்று கூறினார்கள்.
அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டை வீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக் கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்து விட்டேன் என்று கூறினார். 
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் உனது இரு குர்பானிப் பிராணியில் இதுவே சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : முஸ்லிம் (3625)
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா, புகாரி(தஃலீக்)
இந்த ஹதீஸை இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்துள்ளார்கள். ஹாஃபிள் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபதஹுல் பாரி என்ற நூலில் இந்தச் செய்தி அபூநுஐம் அவர்களின் அல்முஸ்தத்ரக் என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெறுவதாக குறிப்பிடுகின்றார். எனவே குர்பானிப் பிராணிகளை முன் கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டு கொழுக்க வைக்கலாம்.
குர்பானிப் பிராணிகள் வாங்கும் போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். ஏழைகள் உயர்தரமான இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு. இதனை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நீ தூய்மையானதும், தன்யீம்' என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னைச் சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரி(1287)
சிறந்த அமல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வை நம்புவதும் அவனுடைய பாதையில் போர் புரிவதுமாகும் என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானால் விருப்பமுள்ள அதிக விலையுள்ள அடிமை (யை விடுதலை செய்வது) என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)
நூல் : புகாரி (2518)
பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டி வைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்து விடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது. இது போன்று குறைகளை ஏற்படுத்தி குர்பானிக் கொடுத்தால் இதில் எள் அளவும் பயனில்லை.
இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும் போது அதற்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது. 
ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி
காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத்தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.

பிராணியின் வயது
குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல்விழுந்திருக்க வேண்டும். சிலர் பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை. 
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560) 
அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாதக் குட்டி) உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத் தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர். 
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர-)
நூல் : முஸ்லிம் (3634)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸயீ (4306)
பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகளில் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால் தான் வயதைக் கணிப்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.
அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறு மாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.

பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
(
ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (3799)

Monday, 8 October 2012

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 07.10.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 07.10.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

வாராந்தர பயான்Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக06.10.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 06.10.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Saturday, 6 October 2012

இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?



இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி
onlinepj.com
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.
ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பலன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 
நூல் : முஸ்லிம் (3084) 
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)
அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)
மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 
நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.