இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்
அப்துந் நாசிர், கடையநல்லூர்
அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச்சிந்தனை நாளுக்கு நாள் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. இறையருளால் இந்ந ஏகத்துவக்கொள்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள் ஏகத்துவவாதிகள் தான். இவ்வுலகிலும்,மறுமையிலும் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் கொள்கை அறியா மக்களிடமும்,கொள்கை எதிரிகளிடமும் சென்றடைய வேண்டுமென்றால், மென்மேலும் வளர்ச்சி காணவேண்டுமென்றால் அல்குர்ஆனும், அண்ணல் நபிகளாரின் வாழ்வும் போதிக்கின்ற பண்புகளைகொள்கைச் சகோதரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தான் பிரச்சாரப் பாதையில் சந்திக்கும் இன்னல்களைப்பொறுத்துக் கொண்டு, மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. நமக்குத் துன்பம்விளைவித்தவர்களுக்கும் நாம் நன்மையை நாடும் போது நம்முடைய எதிரிகள் கூட உற்ற தோழராகமாறிவிடுவார். ஆனால் இந்தத் தன்மையை நாம் பெறுவதென்பது இறைவன் நமக்கு செய்யும் பெரும்பாக்கியம் தான்.
இதோ திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும்,உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையைமேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம்உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
அல்குர்ஆன் 41:34,
35
இறை நம்பிக்கையாளர்கள், தீங்கிழைப்போருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும்,மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் திருமறைக் குர்ஆன் பலஇடங்களில் வலியுறுத்துகிறது.
நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.
அல்குர்ஆன் 23:96
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்றுவிழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:134)
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவமாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்துஅலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா?அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 24:22)
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!
(அல்குர்ஆன் 7:199)
யுக முடிவு நேரம் வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!
(அல்குர்ஆன் 15:85)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்என்பதையும், அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து விட வேண்டும் என்பதையும் நமக்குப்போதிக்கின்றன. ஏகத்துவப் பிரச்சாரக் களத்தில் இந்தத் தன்மைகள் மிக மிக அவசியமான ஒன்றாகும்.கொள்கை விரோதிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிடமிருந்து ஏற்படக்கூடியஇடைஞ்சல்களையும், இன்னல்களையும் மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மைதான் சத்தியக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.
மன்னிக்கும் தன்மை என்பது இரண்டு அடிப்படையிலாகும்.
ஒன்று: பிரச்சாரக்களத்தில் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்து இடர் ஏற்படுத்தியவர்களை மன்னித்தல்
இரண்டு: நாம் பலமிக்கவர்களாக, எதிரிகளைத் தண்டிப்பதற்கு வலிமையுடையவர்களாக இருக்கும்காலகட்டத்திலும் எதிரிகள் செய்த பாவங்களை மன்னித்து அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதாகும்.
முஃமின்களின் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இதற்கு ஏராளமானசான்றுகளை நாம் காணலாம்.
தாயிஃப் நகர் துயரச் சம்பவம்
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையானகால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்ததுன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னுஅப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குபதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்'என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன்என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள்என்னை அழைத்து, உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்தபதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்குஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான் என்றுகூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி,பிறகு, முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள)இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள்விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்) என்று கூறினார்.உடனே, (வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும்இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான்நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்) என்று சொன்னேன்.
நூல்: புகாரி 3231
நபியவர்களுக்கு கல்லடிகளாலும், சொல்லடிகளாலும் வேதனையளித்த தாஃயிப் நகர மக்களுக்குஎதிராக நபியவர்கள் பிரார்த்திக்கவில்லை. அவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்களுடையசந்ததிகளாவது திருந்துவார்கள் என்று கொள்கைக்காக அவர்கள் செய்த அநியாயங்களையெல்லாம்பொறுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ் தாயிஃப் நகரத்தில் மிகப்பெரும் இஸ்லாமிய பேரெழுச்சியை ஏற்படுத்தினான்.கொள்கைக்காக நாம் சந்திக்கும் இன்னல்களையும், இடறுகளையும் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ்சத்தியக் கொள்கையை மேலோங்கச் செய்வான் என்பதற்கு தாயிஃப் நகரச் சம்பவம் மிகப்பெரும்சான்றாகத் திகழ்கிறது.
கொலை செய்ய வந்த கொடியவர்களுக்கும் மன்னிப்பு
சத்தியக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக நபியவர்கள் மக்காவிலிருந்துமதீனாவிற்கு குரைஷிக் காஃபிர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். நபியவர்கள் மதீனாவிற்குச்சென்றடையவதற்கு முன்னால் அவர்களை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என்றும்சண்டாளர்கள் சதி செய்தார்கள்.
நபியவர்களையும், அவர்களின் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களையும் உயிருடனோ அல்லதுகொலை செய்தோ கொண்டு வருபவர்களுக்கு நூறு, நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றுஅறிவிப்புச் செய்தார்கள். நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும் கொலை செய்துஎப்படியாவது இருநூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெறவேண்டும் என்று வெறிபிடித்து வந்தார் சுராகாபின் ஜூஃசும் (ரலி) அவர்கள். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. இறையருளால்சுராகாவின் வஞ்சக எண்ணம் ஈடேறவில்லை. நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும்அல்லாஹ் தனது வல்லமையால் காப்பாற்றினான்.
அத்தகைய கொடியவரான சுராகாவைக் கூட நபியவர்கள் மன்னித்தார்கள். இந்த மன்னிக்கும் தன்மைதான் கொடியவர்களிடம் கூட சத்திய மார்க்கத்தைக் கொண்டு சேர்த்தது. சுராக்கா (ரலி) அவர்களைஇஸ்லாத்தில் இணைய வைத்தது. இதோ ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப் பெற்ற சுராகாவின்சம்பவத்தை சுருக்கமாகக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்ற போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும்என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக(அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரது குதிரை அவருடனேயேபூமியில் அழுந்தி விட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள்அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: பராஉ (ரலி), நூல்: புகாரி 3908,
5607
இந்த சம்பவம் புகாரி 3615வது ஹதீஸிலே விரிவாக இடம் பெற்றுள்ளது.
