Saturday 28 April 2012

குர்ஆன் கூறும் இறையச்சமுடையோரின் இம்மை பலன்கள்


இறைவனின் திருப்பெயரால்
குர்ஆன் கூறும் இறையச்சமுடையோரின் இம்மை பலன்கள்
நம் இஸ்லாமிய சமுதாய மக்களில் பெரும்பான்மையானோர் இறைவனுடைய பயமில்லாமல் அதிகமான தவறுகளை செய்வதை காண்கிறோம். இப்படி தவறு செய்யக்கூடிய மனிதர்களிடம் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னால் அதுவெல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது சஹாபாக்கள் காலத்திற்கு தான் சரியாக அமையும் என்று கூறுவதை பார்க்கிறோம். அதே போல் வியாபாரத்தில் மோசடி,பொய்,ஹராமான வியாபாரம் செய்பவர்களிடம் இது தவறு என்று சொல்லும்போது அவர்கள் சொல்லக்கூடிய பதில் இப்படி நாங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால் எங்களுக்கு இந்த உலகத்தில் ஒன்றும் கிடைக்காது. வியாபாரம் செய்யவே முடியாது என்று பதில் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு நற்செய்தியாக அல்லாஹ்வை பயந்து நடப்பவர்களுக்கு இந்த உலகத்திலேயே பல்வேறு விதமான நன்மைகளையும்,இன்பங்களையும் தருவதாக அல்லாஹ் குர்ஆனில் வாக்களிக்கிறான். அந்த இறையச்சம் உடையோருக்கு கிடைக்கும் இம்மை பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1.வேலைகள் இலகுவாகும்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்
அல் குர்ஆன் (65:4)


2. எதிரிகளின் சூழ்ச்சி பலனளிக்காது.
உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.          அல் குர்ஆன் (3:120)
3. அல்லாஹ் பாதுகாப்பான்.
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் சிறிதும் உம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். அநீதி இழைத்தோர் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன்.  அல் குர்ஆன் (45:19)
4. அல்லாஹ் வானவர்களை இறக்கி உதவிபுரிவான்.
அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
அல் குர்ஆன் (3:125)
5.ஷைத்தான் தீண்டினால் சுதாரிப்பு கிடைக்கும்.
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
அல் குர்ஆன் (7:201)
6. வானம்,பூமியில் இருந்து பரகத் கிடைக்கும்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானி லிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக  அவர்களைத் தண்டித்தோம்.
அல் குர்ஆன் (7:96)
7. சத்தியம் எது? ,அசத்தியம் எது? என்ற தெளிவை வழங்குவான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான். உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். அல் குர்ஆன் (8:29)
8. அறியாத புறத்திலிருந்து உணவளிப்பான்.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
 அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான். அல் குர்ஆன் (65:2,3).
9. அமல்கள் சீராகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
 அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
அல் குர்ஆன் (33:70,71)
10. அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
அல் குர்ஆன் (3:76)

தொடரும் இன்ஷா அல்லாஹ்.
by YASAR ARAFATH D.I.SC

No comments:

Post a Comment