நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
அபூஹனிஃபாவின் ஃபத்வா
மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள்
அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம் 3, பக்கம் 116
(ஃபதாவா ஆலம்கீரி என்பது
ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.)
இந்த ஃபத்வாவின் விபரீதத்தை, அபத்தத்தைப் புரிந்து
கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும்
ஹராமே!
யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம்
ஆக்கினான். ஆனால் அவர்கள் அதை உருக்கி,பிறருக்கு விற்ற
காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள் என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ் தனது
கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட
போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2224
நூல்: புகாரி 2224
இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை
விற்பதும் ஹராமே என்பதையும்,அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது
என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையிலே மது, பன்றி, சிலை, செத்தவை ஆகியவை
இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப் போன்று விற்கவும் தடை
செய்யப்பட்டுள்ளன.
எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்க, பருகக் கூடாது என்று
ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது என்பதை இந்த அடிப்படையிலிருந்து
புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாக, தடை செய்யப்பட்ட பானங்களை
விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு
மட்டும் விலக்களித்திருக்கின்றார். இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல.
மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை, அசுத்தத்திலிருந்து
தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பது அனுமதி
என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது
கூடும் என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?
பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய
போதனை. இதை வலியுறுத்தி எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா
கண்டு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் ஒன்றை ஹராம் என்பதும், ஹலால் என்பதும் இறைவனின்
அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோ, அவன் அனுமதித்த ஒன்றைத்
தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும் அதிகாரம் இல்லை.
பணத்திற்காகத் தொழுகை
மத்ஹப் வழி
"நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு
தங்கக் காசு தருகிறேன்'' என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த
நோக்கத்திற்காகவே அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற
வேண்டும். தங்கக் காசுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது.
(துர்ருல்
முக்தார், பாகம்: 1, பக்கம்: 473)
ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல்
முக்தாரில் மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.
மாநபி வழி
வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்ற, தூய எண்ணத்துடன் நிறைவேற்ற
வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோ, விளம்பர நோக்கமோ இருக்கும்
எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை
அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில்
ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக்
கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை)
அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்)
கூறினார்.
அல்குர்ஆன் 5:27
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி
வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலை
நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை
பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் 98:5
இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல்
மக்களுக்காக தொழுவது நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின்
குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற
நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது
சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே
அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 4:142
இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த
ஒரு வணக்கத்திற்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி
எடுத்துரைக்கின்றது.
"மக்கள் கேட்க வேண்டும்
என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச்
செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால்
அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்'' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: முஸ்லிம்
நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட
வேண்டும், மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும்
இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத்
தொழுதால் அந்தத் தொழுகை செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம்
எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும் எதிரானது;முரணானது.
மழைத் தொழுகை இல்லை (?)
மத்ஹபு வழி
இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை
வேண்டுவதிலே ஜமாஅத்தாகத் தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள்
தனித்தனியாகத் தொழுதால் கூடும். "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்.
அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்' என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது
துஆ செய்வதும் பாவமன்னிப்புத் தேடுவதும் தான். நபி (ஸல்) அவர்கள் மழை
வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை.
நூல்: ஹிதாயா
பாகம் 1, பக்கம் 87
மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும்
அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை
தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை
இங்கே குறிப்பிடுகிறோம்.
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை
வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப்
போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),
நூல்: புகாரி 1012
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப்
பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது
மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள்
தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 1024
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும்
உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற
திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ
வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு
நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும்
ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 512
இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு
செய்து. அபூஹனிபாவின் கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு
விட்டார் என விமர்சிக்கின்றார். அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.
மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு
ஆதாரங்களை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத்
தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று
திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக் கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை
என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என
மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? எங்கோ தவறு
நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?என்பதற்காகவே இதைக்
குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து
கொள்கின்றார் என்று நாம் கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும்
தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில் அவர் தப்பும் தவறுமாகத்
தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.
தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு
விலகி, தவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற
வேண்டும் என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தொழுகையின் துவக்கம் இனி "அர்ரஹ்மானு அக்பர்'?
தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என
கூறுவோம். இது தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின்
ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம்.
இதைத் தான் அல்லாஹ் தன் தூதர் மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு
மாற்றமாக, நாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது.
அந்த அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.
தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு
அக்பர் என்று கூறுவதற்குப் பதிலாக அர்ரஹ்மானு அக்பர், அல்லாஹு அஜல்லு என்று
கூறினால் அவரது தொழுகை செல்லும், அதில் எந்தத் தவறும் இல்லை என்று இமாம்
அபூஹனிபா கூறுகிறார்.
தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லு, அல்லாஹு அஃலமு, அர்ரஹ்மானு அக்பர்,லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது
இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக் கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம்
செல்லும்.
நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 47
அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில்
தொழுகையில் குர்ஆன் வசனங்களை பாரசீக மொழி, வங்காள மொழி என எந்த
மொழியில் ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே.
(பார்க்க: நூல் ஹிதாயா, பாகம்: 1, பக்கம் 47)
அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம்
ஒன்றுமில்லை. யாருக்காகத் தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமா? அவன் ஏற்றுக் கொள்வானா
என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.
அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப்
பின்பற்றும் மத்ஹப்வாதிகள் தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களா? இறைவனின் உண்மையான
அடியார்கள், நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.






